மார்ச் மாதம் வரை பணத்தட்டுப்பாடு நீடிக்குமா?. பொருளாதார வல்லுநர்கள் பரபரப்பு தகவல்

நாட்டில் பணத்தட்டுப்பாடு, வரும் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் வடிவங்கள், சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத்தொடர்ந்து, பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் மாற்றுவதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

பொதுமக்கள் தங்களிடமிருந்த பழைய ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் செலுத்தியுள்ள நிலையில், அவற்றை முழுயாக திரும்பப்பெற முடியாமல் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது.

மேலும், ரிசர்வ் வங்கியால் மக்களின் தேவைக்கேற்ற அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை உடனடியாக அச்சடித்து வழங்கமுடியாத காரணத்தாலும், நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, 50 நாட்களில் பணத்தட்டுப்பாடு நிலமை சீரடையும் என பிரதமர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், இந்த நிலைமை தொடர்ந்து மார்ச் மாதம் வரை நீடிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, விரைவாக வழங்கப்படுவதை பொறுத்தே, இந்த பணத்தட்டுப்பாடு நீங்கும் என்றும், எனினும் புதிதாக அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் மதிப்பு மொத்தமாக திரும்பப்பெறப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மதிப்பில் 25 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்பதால், அந்த சுமையையும் மக்கள் ஏற்கவேண்டியிருக்கும். இந்த பிரச்னைகள் மார்ச் மாதம் வரை நீடிக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, புதிய ஆயிரம் ரூபாய் நோட்டுகளின் மாதிரி வடிவங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பச்சை நிறத்திலும், வெளீர் நீல சாம்பல் நிறத்திலும் இந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இணைதளங்களில் வலம் வருவதால், எந்த நிறத்தில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே அரசின் பொருளாதாரத்துறைச் செயலாளர் திரு. சக்திகாந்ததாஸ், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மீண்டும் புதிய வடிவில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தததால், தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த ரூபாய் நோட்டுகள் உண்மையானவை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியுள்ளன.