104வது இந்திய அறிவியல் மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வந்தார்.

உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் சங்கமிக்கும் 104-வது இந்திய அறிவியல் மாநாடு திருப்பதியில் இன்று தொடங்குகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். இந்த மாநாட்டில் நோபல் பரிசு பெற்ற 6 விஞ்ஞானிகள் பங்கேற்கின்றனர்.

இதைத் தவிர 20,000க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உலகெங்கிலும் இருந்து பங்கேற்கின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மாநாட்டின் மையக் கரு, தேசிய மேம்பாட்டிற்கு அறிவியல் தொழில்நுட்பம் என்பதாகும்.

இந்த மாநாட்டை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று தனி விமானம் மூலம் திருப்பதி வருகை தந்தார். அவரை ஆந்திர பிரதேச முதலமைச்சர்  சந்திர பாபு நாயுடு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மாநாட்டை தொடங்கி வைத்தபின் பிரதமர் நரேந்திர மோடி, 50 புகழ்பெற்ற விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடுகிறார். இதில் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளும் இடம்பெறுகின்றனர். அவர்களை பிரதமர் கவுரவிக்கிறார்.