பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குருமீத் ராம் ரஹீம் குற்றவாளி என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் நடத்திய வெறியாட்டத்தில் பஞ்சாப்பில் உள்ள மலவுட், பாலுன்னா ஆகிய 2 ரெயில் நிலையங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். பஞ்சாப் மாநிலம் முழுவதும் குருமீத் ஆதரவாளர்கள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெரும் கலவரம் மூண்டுள்ளது.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரும், சாமியாருமான குருமீத் ராம் ரஹீம், தனது ஆசிரமத்தில் உள்ள 2 பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று வழக்கு பதிவு செய்து கடந்த 15 ஆண்டுகளாக சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் குருமீத் குற்றவாளி என சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஜகதீப் சிங் தீர்ப்பளித்தார்.

இதைத் தொடர்ந்து குருமீத்தின் ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானாவில் பல இடங்களில் வன்முறையில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இவர்களைக் கட்டுப்படுத்த போலீசார், துணை ராணுவத்தினர் இணைந்து செயல்படுகின்றனர். இந்த கலரவத்தில் இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், பஞ்சாப்பில்  உள்ள மலவுட், பாலுன்னா ஆகிய 2 ரெயில் நிலையங்களுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இது குறித்து  வடக்கு ரெயில்வேயின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் சர்மா கூறுகையில், “ சாமியார் குருமீத் மீதான தீர்ப்புக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் மலவுட், பாலுண்ணா ரெயில்கள் அவரின் ஆதரவாளர்களால் அடித்து நொறுக்கி, தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 23 ந்தேதி முதல் 27-ந்தேதி வரை 211 ரெயில்கள் ரத்து செய்யப்பப்பட்டுள்ளன. 91 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 120 பாசஞ்சர் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 24 ரெயில்களும் குறுகிய தூரம் இயக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. பஞ்சாப், ஹரியானா மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையால், 236 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.