தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அதிக அளவில் குவிகிறது. புகார்கள் எண்ணிக்கை 1,500 மடங்காக உயர்ந்துள்ளது. இவற்றை விசாரிக்க போதுமான அலுவலர்கள் இல்லாமல் ஆணையம் திணறி வருகிறது.

மனித உரிமை ஆணையப் பாதுகாப்பு சட்டம் 1993-ன் கீழ் கடந்த 1995-ம் ஆண்டு தேசிய மனித உரிமை ஆணையம் துவங்கப்பட்டது. அப்போது 59 அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்கள், ஒரு ஆண்டுக்கு 7,843 புகார்களை விசாரித்து வந்தனர்.

இந்த அதிகாரிகள் எண்ணிக்கை மார்ச் 5, 2015-ல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி 49 ஆக குறைந்துள்ளது. ஆனால், ஆணையத்தால் பெறப்படும் புகார்களின் எண்ணிக்கை தற்போது வருடம் ஒன்றுக்கு சுமார் 1.14 லட்சமாக உயர்ந்துள்ளது. இது ஏறத்தாழ 1500 மடங்கு அதிகமாகும்

இந்தப் புகார்களில் தடுப்புக் காவலில் பலி தொடர்பானவை 5,496. உண்மை அறிபவை 1,851 மற்றும் 120 விரைவு விசாரணை பிரிவை சேர்ந்தவை ஆகும். தடுப்புக்காவல் உயிரிழப்பு தொடர்பான புகார்கள் மட்டும் இதுவரை 1,200 மடங்கு உயர்ந்துள்ளன.

இந்த விவரங்கள் ஆணையம் சார்பில் சமீபத்தில் உச்ச நீதிமன்ற வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் மட்டும் ஜல்லிகட்டு போராட்டம் உட்பட பல்வேறு முக்கிய புகார்கள் மீதான விசாரணை முடிக்கப்பட்டும் அதன் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்க முடியாமல் உள்ளது. இதற்கு அலுவலர் பற்றாக்குறையே காரணம்’’ என்றனர்.

மணிப்பூரில் சிஆர்பிஎப் படையினருக்கு மனித உரிமை ஆணையம் இட்ட உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.

இதன் விசாரணையின்போது நீதிபதிகள் ‘பற்களை இழந்த புலி’ என மனித உரிமை ஆணையம் பற்றி கருத்து கூறியதுடன், ஆணையத்துக்கு இயக்குநர் ஜெனரல் ஒரு வாரத்துக்குள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் கடந்த ஜனவரி 23-ல் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு உடனடியாக பி.வி.கே.ரெட்டி எனும் ஐபிஎஸ் அதிகாரியை நியமித்தது. ஆனால், ரெட்டி ஓய்வு பெற்றுவிட்டார். இந்தப் பதவி கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நிரப்பப்படாமல் உள்ளது.

இதற்காக மத்திய அரசிடம் இருந்த வந்த பெயர் பட்டியல் சரிபார்த்து அனுப்பப்பட்டு விட்டது. ஆனாலும் இயக்குநர் ஜெனரல் பதவி இன்னும் நிரப்பப்படாமலே உள்ளது எடுக்கவில்லை என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன