ஏ.சி. ஓட்டல் அல்லது ரெஸ்டாரன்ட்களில்,  ஏ.சி. இல்லாத இடத்தில் இருந்து பார்சல் உணவுகளை வாங்கிச்சென்றாலும், அல்லது சாப்பிட்டாலும், ஒரே மாதிரியாக 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) கடந்த ஜூலை 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதில் ஏ.சி. அல்லாத ரெஸ்டாரண்ட், ஓட்டல்களில் சாப்பிட்டால் 12 சதவீதம் சேவைவரியும், ஏ.சி. அறையில் சாப்பிட்டால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி.வரியும், 5 நட்சத்திர ஓட்டலில் மது அருந்தும் பார் வசதி இருந்தால் அதற்கு 28சதவீதம் வரியும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய கலால் மற்றும் சுங்க வாரியம் புதிய விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஓட்டலில் எந்த அறையில் இருந்து உணவு பார்சல் எடுத்து வந்தாலும், சரிசமமாக 18சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும்.

அதாவது, ஏ.சி, வசதி கொண்ட ஓட்டலில் எந்த அறையில் இருந்து  உணவு பார்சல் வாங்கிச் சென்றாலும், 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிக்கு பதிலாக இனி 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஏ.சி. வசதி உள்ள ஓட்டலில், ஏ.சி. அல்லாத அறையில் இருந்து உணவு பார்சல் வாங்கிச் சென்றாலும், அல்லது சாப்பிட்டாலும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.