சிறுமி ஆசிஃபா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ்காரருக்கு நடைபெறுவதாக இருந்த திருமணம் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் ஒருவர் தப்பிக்க உதவிய காவல் அதிகாரி உட்பட 8 பேர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், மெஹ்பூபா முப்தி தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாஜகவைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் கலந்து கொண்டர். இந்த நிலையில், அந்த இரண்டு அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதாக காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்பூ முப்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே கைது செய்யப்பட்டவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கதுவா முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்று தொடங்குகிறது. ஆனால், கொலை செய்யப்பட்ட ஆசிஃபாவின் குடும்பத்தினர், வழக்கு விசாரணை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இந்த நிலையில், வழக்கை விசாரிக்கும் பெண் வழக்கறிஞர் தீபிகா சிங் ராஜவத், தனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

ஆசிஃபா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 போலீசாரில் ஒருவர் தீபக் கஜூரியா (28). இவருக்கும் ரேணுகா சர்மா (24) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த மாதம் 7 ஆம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் 26 ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட தீபக் கஜூரியா, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ரேணுகா சார்மாவுடனான திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது. 

இது குறித்து ரேணுகா, என் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், ஒரே ஒரு முறை சிறையில் தீபக்கை சந்தித்து, சிறுமி பலாத்காரத்தில் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என கேட்க நினைக்கிறேன். அவர் என்னிடம் உண்மையாக இருப்பார். இந்த குற்றத்தில் தொடர்பு இருப்பது உண்மைதான் என்று அவர் கூறினால், வேறு மாப்பிள்ளை பார்க்கும்படி என் பெற்றோரிடம் கூறுவேன். தொடர்பு இல்லை என்று அவர் கூறினால், எவ்வளவு காலமானாலும் அவருக்காகக் காத்திருப்பேன். ஆனால் தீபக்கை சந்திக்க என்னை அனுமதிக்க மறுக்கின்றனர். ஒரு குழந்தையை பலாத்காரம் செய்து கொல்கிற அளவுக்கு தீபக் கஜூரியா நடந்து கொண்டிருப்பார் என்று நான் நம்பவில்லை. அதே நேரத்தில் உண்மை எதுவென்று எனக்குத் தெரியவில்லை. சிபிஐ விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும் என்று ரேணுகா சர்மா கூறினார்.