ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது  பகுதியில் 5 ராக்கெட் குண்டுகளை ஏவி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள இச்சம்பவம் மீண்டும் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமெரிக்க ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை தளபதி காசிம்  சுலைமானி கொல்லப்பட்டார் .  இது மொத்த ஈரான்  மக்களையும் கொந்தளிப்படைய செய்தது சுலைமானியின் படுகொலைக்கு அமெரிக்கா பதில் சொல்லியே ஆகவேண்டும் என சூளுரைத்த  ஈரான் அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் ராணுவ துருப்புகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 

சுலைமானி தீவிரவாதத்திற்கு துணை போனதால் அவரை படுகொலை செய்ததாக அமெரிக்கா பகிரங்கமாக தெரிவித்தது .  இதனையடுத்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க விமான தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது .  அதில் 80 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்தது ஆனால் ராணுவ வீரர்கள் கொல்லப்படவில்லை அவர்கள்  பாதுகாப்பாக உள்ளனர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.  அத்துடன் அமெரிக்காவை சீண்டிப் பார்க்கும் வேலையை ஈரான் கைவிடாவிட்டால்  கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்தது . ஆனாலும் ஈரான் தொடர்ந்து அமெரிக்க ராணுவத் தளவாடங்கள்  மீது தாக்குதல் நடத்தி வருகிறது .

இந்நிலையில் மீண்டும் அமெரிக்க தூதரகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் 5 ராக்கெட் குண்டுகள் வீசி தாக்கப்பட்டுள்ளது.   ஆனால் இதில்  உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை .  அதாவது அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பாதுகாப்பு நிறைந்த பகுதியில்  ராக்கெட் குண்டு வீசி தாக்கியுள்ளதின் மூலம்,   தங்களால் எந்த இடத்தையும் குறிவைத்து தாக்க முடியும் என்பதை நிரூபிக்க இத்தகைய தாக்குதலை ஈரான் நடத்தி வருகிறது என கூறப்படுகிறது .  5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க படைவீரர்கள் முகாமிட்டுள்ள நிலையில் அங்கு ராக்கெட் குண்டு வீச்சு நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது