பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓய்வெடுக்க பிரதமர் முடிவு..? அவரசமாக இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஆபே.
உடல்நலப் பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஜப்பான் நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
உடல்நலப் பிரச்சினை காரணமாக ஜப்பான் பிரதமர் அபே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ஜப்பான் நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்து அறிவிக்க உள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கடந்த சில ஆண்டுகளாக குடல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வருகிறார், கடந்த சில வாரங்களில் அவர் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. அதேபோல் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகின. மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அவர், தான் நலமாக இருப்பதாக கூறினார். ஆனால் இன்னும்கூட அவரது உடல்நிலை சரியாகவில்லை என கூறப்படுகிறது. அதேநேரத்தில் அவருக்கு ஓய்வு அவசியம் என அவரது மருத்துவர்களும், குடும்ப உறுப்பினர்களும் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அவர் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பதன் மூலம் பணிச்சுமையால் நோயின் தாக்கம் அதிகமாகக்கூடும் என்பதாலும், அது மேலும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் அவரது குடும்பத்தினர் கவலைப்படுகின்றனர் என ஜப்பான் நாட்டின் அரசு தொலைக்காட்சியான என்ஹெச்கே செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானில் அரசியல் குடும்பத்தில் பிறந்த ஷின்சோ அபே, கடந்த 2012-ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றது முதல் தொடர்ந்து பிரதமராக பதவி வகித்து வருகிறார். உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு என்ற பெயரை ஜப்பான் தக்க வைத்திருப்பதற்கு அபேவே முக்கிய காரணம் கருதப்படுகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அந்நாட்டு மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது, எனவே அவர் உடல்நிலை குறித்து இன்று அவர் மாலை செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளதாகவும், பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை இன்று ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அதை அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.