எந்த வைட்டமின் குறைபாட்டால் அடிக்கடி தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.

நீங்கள் அடிக்கடி தலைவலிகள் அவதிப்படுகிறீர்களா? எப்போதுமே சோர்வாக உணர்கிறீர்களா? நன்றாக ஓய்வெடுத்த பிறகும் இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லையா? இதற்கு வைட்டமின் பி12 குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே வைட்டமின் பி12 என்றால் என்ன? அதன் குறைபாட்டிற்கான காரணங்கள் அறிகுறிகள், பாதிப்புகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வைட்டமின் பி12:

வைட்டமின் பி12 என்பது நம்முடைய உடலின் பல செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கியமான ஊட்டச்சத்தாகும். இது நீரில் கரையக்கூடியது. வளர்ச்சியை மாற்றம், செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த நல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்று என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். முக்கியமாக இது சிவப்பு ரத்த அணுக்கள் உருவாக்குதல், நரம்பு மண்டலத்திற்கு, மூளையின் செயல்பாட்டிற்கு மற்றும் டிஎன்ஏ தொகுப்பிற்கு ஆகியவற்றிற்கு மிகவும் அவசியம். இந்த ஊட்டச்சத்து சில உணவுகளில் இயற்கையாகவே இருப்பது மட்டுமல்லாமல், சப்ளிமெண்டாகவும் உள்ளன. இந்த வைட்டமின் பி 12 குறைபாடு கீழே கொடுக்கப்பட்டுள்ள சில காரணங்களால் ஏற்படலாம். அவை..

வைட்டமின் பி12 குறைபாட்டிற்கான காரணங்கள் :

உணவுகளின் குறைபாடு - பொதுவாக வைட்டமின் பி12 மாட்டிறைச்சி, மீன், முட்டை மற்றும் பால் பொருட்களில்தான் அதிகமாக கிடைக்கிறது. ஆகவே சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த குறைபாடு அதிகமாகவே ஏற்படும். அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைட்டமின் போதுமான அளவு கிடைக்காமல் கூட போகலாம்.

மருந்துகளின் தாக்கம் - நீரிழிவு நோய் மற்றும் வயிற்று அமிலம் பிரச்சினை போன்ற மருந்துகள் வைட்டமின் பி12 குறைக்க வாய்ப்பு உள்ளன.

வயது மூப்பு காரணம் - பொதுவாக வயதானவர்களிடம் வயிற்று அமிலம் குறைவாக சுரக்கும். இதன் விளைவாக வைட்டமின் பி12 உறிஞ்சுதல் பாதிக்கப்படும்.

வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள் :

  • அதிகப்படியான சோர்வு
  • அடிக்கடி தலைவலி
  • எதிர்பாராத எடை இழப்பு
  • குடல் பிரச்சனைகள்
  • கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுதல்
  • வாய்ப்புண்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போகுதல்.

வைட்டமின் பி12 குறைபாட்டால் வரும் பாதிப்புகள் :

ரத்த சோகை - வைட்டமின் பி12 குறைபாட்டால் உடலில் பெரிய சிவப்பு இரத்த அணுக்கள் உருவாகும். இதன் விளைவாக அதிகப்படியான சோர்வு, வெளிறிய தோல், ஆற்றல் பற்றாக்குறை போன்றவை வைட்டமின் பி12 குறைபாட்டால் வரும்.

நரம்பு சம்பந்தமான பிரச்சனைகள் - நினைவகக் கோளாறுகள், மனசோர்வு, அடிக்கடி கை கால் மரத்துப்போதல், டிமென்ஷியா போன்றவை வைட்டமின் பி12 குறைப்பாட்டின் பாதிப்புகள்.

பிற பிரச்சனைகள் - மூட்டு வலி, கண் பார்வை பாதிப்பு, தொண்டை வலி மற்றும் கருவின் நரம்பு மண்டலத்தில் குறைபாடுகள் ஏற்படுதல் ஆகியவை வைட்டமின் பி12 குறைபாட்டின் பாதிப்பு ஆகும்.

வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க சாப்பிட வேண்டிய உணவுகள் :

1. ஆடு அல்லது கோழியின் கல்லீரல் தினமும் எடுத்துக் கொள்ளலாம். இது தவிர சால்மன், டூனா, மாட்டிறைச்சி, முட்டை குறிப்பாக முட்டையின் மஞ்சள் கரு, பால், தயிர், பாலாடைக்கட்டி போன்றவற்றில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளன.

2. நீங்கள் சைவம் என்றால், முழு தானியங்கள், சோயா பால், பாதாம் பால், கோதுமை, போன்றவற்றில் வைட்டமின் பி12 உள்ளன. இது தவிர மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு சப்ளிமென்ட் எடுத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு : நீண்டகாலமாக வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் மோசமான ரத்தம் மற்றும் நரம்பு பிரச்சனை ஏற்படுத்தும். இதன் நாள் அதிகப்படியான சோர்வு, ஞாபக மறதி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே, மேலே சொன்ன அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனே ரத்த பரிசோதனை செய்து, பிரச்சினையை சரி செய்யுங்கள்.