உடல் எடையை குறைக்க வேண்டும். ஆனால் கஷ்டப்படாமல் உடல் எடையை குறைக்க ஏதாவது வழி இருக்கா? என தேடுபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இதோ உங்களுக்கான எளிய வழிகள்.
பலருக்கும் உள்ள பெரிய கவலை உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதுதான். உடல் எடைக் குறைப்புக்கு இது அவசியம். நிறைய சாப்பிட்டு விடுவோம். வயிறைக் கட்டுப்படுத்த முடிவதில்லையே.. கலோரிகள் கூடி விடும். உடல் எடையும் கூடி விடும். பிறகு அதைக் குறைக்க மெனக்கெடுவோம். உடல் எடைக் குறைப்புக்கும், கலோரிகளை அதிக அளவில் வெளியேற்றுவதற்கும் எளிமையான சில வழிகளை உங்களுக்குச் சொல்கிறோம். படிச்சுப் பார்த்து விட்டு ஃபாலோ பண்ணுங்க.
வெயிட் லாஸ் டிப்ஸ் :
* வாக்கிங் ரொம்ப நல்லது. அதை விட ரொம்ப ரொம்ப நல்லது ஜாகிங். அதாவது மெல்லோட்டம். தினசரி குறிப்பிட்ட நேரம் ஜாகிங் செய்வது நமது உடலின் மொத்த தசைகளையும் வலுவாக்கும். தேவையில்லாத கொழுப்புகளை விரட்டியடிக்கும். கலோரிகளையும் தாராளமாக எரிக்கும். ஜாக்கிங், நமது ஆரோக்கியத்தை வைக்க உதவும்.
* நிறைய தண்ணீர் குடிங்க. நீர் என்பது நமது உடலின் மூலாதாரங்களில் ஒன்று. முக்கியமானதும் கூட. சாப்பிடாமல் இருந்தால் கூட, தண்ணீர் மட்டுமே குடித்து கூட நம்மால் ஜீவிக்க முடியும். அந்த அளவுக்கு அத்தனை சக்திகளும் தண்ணீரில் உள்ளது. சரியான அளவில் நீர் அருந்துவது நமது உடலின் நீர்ச்சத்தை சரியாக வைத்திருக்க உதவும். கலோரிகளையும் இது வெகுவாக குறைக்க உதவுகிறதாம்.
* தியானம் அல்லது யோகாசனம் - யோகா செய்வது நமது மன நிலையை மட்டுமல்லாமல் உடல் நிலையையும் கூட ஒருங்கிணைத்து ஒருங்கமைக்க உதவும். முழு உடலுக்கும் இது நல்லது செய்யும். கலோரிகள் குறைப்புக்கும் இது உதவுகிறதாம்.

* நல்லா துங்கணும் - நல்ல தூக்கம் பல வகையிலும் நமது உடல் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைக்க உதவும். எடைக் குறைப்புக்கும் கூட நல்ல தூக்கம் கை கொடுக்கும். அருமையான ஒரு தூக்கத்தைப் போட்டு பழகிக் கொள்ளுங்கள். தினசரி ரெகுலராக குறைந்தது 7 மணி நேரம் தூங்கினால் போதும். உடலில் உள்ள கொழுப்புகள் ஆட்டோமேட்டிக்காக குறையத் தொடங்குமாம். நமது உடலின் மெட்டபாலிசமும் சீராக இருக்கும் என்பது நிபுணர்களின் கருத்து. கலோரிகளையும் இது குறைக்க உதவுகிறதாம்.
* நீச்சலடிப்பது ஒரு அருமையான உடற்பயிற்சி. நமது உடல் முழுமைக்கும் சிறந்த உடற்பயிற்சியாகவும் இது கருதப்படுகிறது. உடலில் தசையில் சேரும் தேவையில்லாத கலோரிகளை, கொழுப்புகளைக் கரைக்க இது உதவுகிறது. இதயத்திற்கும் கூட நீச்சல் நல்லது செய்கிறதாம். எனவே தினசரி நீச்சல் பழக்கத்தை கைக்கொண்டால் உடம்புக்கு ரொம்பவே நல்லதுங்க.
* ஸ்கிப்பிங் செய்வது நமது உடலின் மொத்த உடல் உறுப்புகளையும் ஆரோக்கியமாக இயங்க வைக்கும். அதிக அளவிலான கலோரிகளை குறைக்க ஸ்கிப்பிங் உதவும். வேகமாகவும் கலோரிகள் குறையும் இதயத்திற்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும் இது சீராக்குமாம்.
* நீங்கள் எந்த உடற்பயிற்சியும் செய்ய நேரமில்லையா.. கவலையே படாதீங்க.. வீட்டில் மாடிப் படி இருக்கும் இல்லையா? அதில் ஏறி தினசரி உடம்புக்கு சற்று வேலை கொடுங்க. மாடிப்படிகள் ஏறுவது அருமையான உடற்பயிற்சி மட்டுமல்லாமல், கலோரிகளை வேகமாக குறைக்கவும் இது உதவுகிறது. குறிப்பிட்ட அளவிலான மாடிப்படிகளை ஏறி இறங்குவதன் மூலம் கலோரிகள் வெகுவாக குறையும். முழங்கால் வலி உள்ளோர் இதைத் தவிர்க்க வேண்டும்.
* உடல் எடை அதிகரிப்புக்கு கெட்ட கொழுப்பு, கலோரிகள் அதிகம் இருப்பதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. நமது மரபணு முறையும் கூட ஒரு காரணம். எனவே எந்தவிதமான உடற்பயிற்சி செய்வதாக இருந்தாலும் உரிய மருத்துவ ஆலோசனை அல்லது சரியான நிபுணரின் கண்காணிப்பு உள்ளிட்டவற்றுடன் அதை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதேசமயம், கொழுப்புப் பொருட்கள், அதிக எடையைக் கொடுக்கக் கூடிய பொருட்களையும் நாம் முடிந்த அளவு தவிர்த்து உடம்புக்கு சத்து தரும் ஆரோக்கிய உணவுகளை மேற்கொள்வதையும் பழகிக் கொள்ள வேண்டும்.
