Asianet News TamilAsianet News Tamil

தொற்று விகிதம் குறைவு தான்.. ஆனாலும் நிபா வைரஸ் ஏன் ஆபத்தானது? எப்படி தடுப்பது? முழு விவரம் இதோ..

நிபா வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Nipah virus Outbreak : Infection rate is low.. But why is Nipah virus dangerous? How to prevent? Here is the full details..
Author
First Published Sep 16, 2023, 12:41 PM IST | Last Updated Sep 16, 2023, 12:44 PM IST

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில், அதன் பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநில அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதுவரை, நிபா வைரஸால் 2 பேர் இறந்துள்ளனர் , 6 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. நிபா வைரஸின் தொற்று பரவல் விகிதம் குறைவாக இருந்தாலும் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. நிபா வைரஸின் இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே இந்த நிபா வைரஸ் ஆபத்தான தொற்றாக கருதப்படுகிறது. நிபா வைரஸ் தலைவலி, தசை வலி, சோர்வு, குமட்டல் போன்ற லேசான அறிகுறிகளுடன் தொடங்கும் அதே வேளையில், மூளையின் செயல்பாட்டை பாதிக்கத் தொடங்கும் போது அது மனக் குழப்பம், வலிப்பு மற்றும் மூளையழற்சி என தீவிரமான அறிகுறிகளையும் ஏற்படுத்தும்.

நிபா வைரஸ் என்றால் என்ன?

நிபா என்பது ஒரு வைரஸ் தொற்றாகும். 1998-ம் ஆண்டு முதன்முதலில் 'நிபா' என்ற பெயர் மலேசிய கிராமத்தில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் இதற்கு நிபா என்று பெயரிடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் என்பது ஒரு ஜூனோடிக் வைரஸ் ஆகும். அதாவது இது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோயாகும். மேலும் இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது.  நிபா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். நிபா வைரஸ் தொற்று கடுமையான சுவாச நோய் மற்றும் மூளையழற்சி ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

 

நிபா வைரஸின் இறப்பு விகிதம் கோவிட்-ஐ விட மிக அதிகம்.. ICMR தலைவர் எச்சரிக்கை..

முதன் முதலில் இந்த வைரஸ் பழம் தின்னும் வௌவால்களில் இருந்து பன்றிகளுக்கும், பன்றிகளிலிருந்து மனிதர்களுக்கும் பரவியது.  நிபா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, தலைச்சுற்றல், மயால்ஜியா, வாந்தி மற்றும் தளர்வான மலம் போன்றவை ஆகும். இது வலிப்பு மற்றும் மூளையழற்சி வடிவில் மூளை ஈடுபாட்டிற்கு முன்னேறலாம். சுவாச செயலிழப்பை ஏற்படுத்தும் சுவாச ஈடுபாடும் இருக்கலாம். நிபா தொற்று குணமடைந்த பிறகு மனநல மற்றும் நரம்பியல் சிக்கல்கள் (மன அழுத்தம், ஆளுமை மாற்றங்கள், கவனத்தில் குறைபாடு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

நிபா வைரஸின் அறிகுறிகள் என்ன?

காய்ச்சல்: நிபா வைரஸ் தொற்று பெரும்பாலும் அதிக காய்ச்சலுடன் தொடங்குகிறது, பொதுவாக நோய் பாதிக்கப்பட்ட 3 முதல் 14 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்படும்.

தலைவலி: கடுமையான தலைவலி பொதுவானது.

தலைச்சுற்றல்: நோயாளிகள் தலைச்சுற்றலை அனுபவிக்கலாம்.

குமட்டல் மற்றும் வாந்தி: குமட்டல் மற்றும் வாந்தி போன்ற இரைப்பை குடல் அறிகுறிகள் ஏற்படலாம்.

கழுத்து விறைப்பு: கடினமான கழுத்து மற்றும் தசை வலி ஆகியவை நோய்த்தொற்றின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

மனக் குழப்பம்: நோய் தீவிரமடையும் போது, நோயாளிகளுக்கு அதிக மனக்குழப்பத்தை உருவாக்கலாம்.

கோமா: கடுமையான சந்தர்ப்பங்களில், நிபா வைரஸ் தொற்று 24-48 மணி நேரத்திற்குள் கோமா நிலைக்கு வழிவகுக்கும்.

கேரளாவில் உள்ள நிபா வைரஸ் பங்களாதேஷ் மாறுபாடு.. அதிக ஆபத்தானதா? என்ன சிகிச்சை?

என்ன சிகிச்சை?

நிபா வைரஸ் தொற்றுக்கு குறிப்பிட்ட வைரஸ் தடுப்பு சிகிச்சை எதுவும் இல்லை என்றும், ஆதரவு சிகிச்சையே சிகிச்சையின் முக்கிய அம்சம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட நபர்கள் பொதுவாக தகுந்த மருத்துவ பராமரிப்பு மற்றும் வைரஸ் பரவாமல் தடுக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர் மேலும், ரிபாவிரின் மற்றும் ஃபாவிபிராவிர் போன்ற சில பரிசோதனை மருந்துகள் சில பலனைக் காட்டியுள்ளன.

நோய் பரவலை எப்படி தடுப்பது?

நிபா தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். நெருங்கிய தொடர்புகள் கண்காணிக்கப்பட வேண்டும், அவர்களும் தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

தொற்று கட்டுப்பாடு: வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் கடுமையான தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

நிபா வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில், நோய்வாய்ப்பட்ட விலங்குகளுடன் தொடர்பைத் தவிர்ப்பது, வௌவால் உமிழ்நீர் அல்லது சிறுநீரால் அசுத்தமான பழங்களை உட்கொள்வதை தவிர்ப்பது. நல்ல சுகாதாரத்தை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகள் தடுப்புக்கு முக்கியம்.

தடுப்பூசிகள்:  இதுவரை நிபா வைரஸுக்கு உரிமம் பெற்ற தடுப்பூசி எதுவும் இல்லை. நிபா வைரஸை எதிர்த்து போராட தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கோவிட் மூலம் நாம் கற்றுக்கொண்டதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் கடந்த சில ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் அதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான கை சுகாதாரம், சமூக இடைவெளி மற்றும் மாஸ்க் பயன்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios