உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பார்லி எப்படி உதவியாக இருக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களால் பலரும் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க பலரும் பல விதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். ஆனால், உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் எடை இழப்பு பயணத்தில் முதலில் தியாகம் செய்ய வேண்டியது நமக்கு பிடித்த உணவுகளை தான். அடுத்ததாக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட உணவுகள் தான் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் உடல் எடையை குறைப்பதற்கு ஓட்ஸ், சிறு தானியங்கள், முழு கோதுமை ஆகியவற்றை பயன்படுத்துவோம். அந்த லிஸ்டில் பார்லியும் உண்டு. ஏனெனில் இதில் கலோரிகள் மிக மிகக் குறைவு. நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளன. இதனால் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வோடு வைத்திருக்கும். தேவையில்லாத உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவும். இதனால் உடல் எடையை எளிமையாக குறைத்து விடலாம். இப்போது இந்த பதிவில் உடல் எடையை குறைப்பதற்கு பார்லியை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.
பார்லி தண்ணீர் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் :
- பார்லியில் கலோரி மிக மிக குறைவாக இருப்பதால் பார்லி தண்ணீரை தினமும் குடித்து வந்தால் செரிமான மண்டலம் சீராக இருக்கும். இந்த பார்லி நீர் தான் மலச்சிக்கல், டயேரியா போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது.
- பார்லியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் அதிக அளவு நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பருவ கால தொற்றுகள் வருவது தடுக்கப்படும்.
- பார்லி கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக இருப்பதால் இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை சேருவது குறையும். அதேசமயம் இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கும். இதனால் உயர் இரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
பார்லி தண்ணீர் தயாரிப்பது எப்படி?
பார்லி தண்ணீர் தயாரிப்பதற்கு 1/2 கப் பார்லியில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு குலைந்து வரும் வரை வேக வைக்கவும். பார்லி நன்றாக வெந்ததும் சாதம் வடிப்பது போல அந்த நீரை தனியாக வடித்து அதில் சிறிதளவு உப்பு மட்டும் சேர்த்து நன்கு ஆறியதும் பிறகு கஞ்சி போல குடிக்கவும்.
பார்லியில் தனித்துவமான சுவை ஏதும் இருக்காது நீங்கள் அதை சுவையாக சாப்பிட விரும்பினால் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு, ஆரஞ்சு சாறு, தேன் என உங்களது விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொண்டு குடிக்கலாம்.
தினசரி உடற்பயிற்சி கூட ஒரு கப் பார்லி தண்ணீரும் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறைய ஆரம்பிக்கும்.
