ஜிம்முக்கு செல்வதற்கு முன்னர் சில உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஜிம்முக்கு செல்பவர்கள் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

தற்போதைய கால இளைஞர்கள் பலரும் தங்கள் உடல் நலன் மீது மிகுந்த அக்கறை கொள்கின்றனர். அவர்கள் ஜிம்முக்கு சென்று தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைக்கின்றனர். ஆனால் அதீத உடற்பயிற்சி செய்யும் சிலர் ஜிம்மிலேயே மரணமும் அடைகின்றனர். ஜிம்முக்கு செல்வதற்கு முன்னர் நாம் சில உடல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். இது நம் உடல் நிலையை புரிந்து கொள்ளவும், பயிற்சியின் போது ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்க்கவும் உதவும். உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்னர் உங்கள் உடல் தயாராக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இந்த பரிசோதனைகள் உதவும். அந்த பரிசோதனைகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதய செயல்பாடு

ஜிம்மில் தீவிரமான உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்னர் இதய செயல்பாட்டை மதிப்பிட வேண்டும். இதற்கு எலக்ட்ரோ கார்டியோகிராம், ஸ்ட்ரெஸ் டெஸ்ட் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய் அல்லது ஒழுங்கற்ற இதயத்துடிப்பு பிரச்சனைகளை கண்டறிய உதவும். ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு, ஹீமோகுளோபின் மற்றும் தைராய்டு செயல்பாடு ஆகியவற்றையும் பரிசோதிக்க வேண்டும். இவை உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பற்றிய தெளிவான புரிதலை அளிக்கும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தீவிர உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்னர் மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும். இதயம் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் ஜிம்மில் தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அது ஆபத்துகளை விளைவிக்கலாம். எனவே இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

எலும்பு மற்றும் மூட்டு பரிசோதனை

ஜிம்மில் எடை தூக்குதல், ஓடுதல் அல்லது தீவிர பயிற்சிகள் செய்யத் திட்டமிட்டால் உங்கள் எலும்புகள் மற்றும் மூட்டுகளின் நிலையை மதிப்பிடுவது அவசியம். முழங்கால், இடுப்பு, தோள்பட்டை மற்றும் முதுகெலும்பு ஆகியவற்றின் இயக்கத்தன்மையை மதிப்பிட வேண்டும். இதற்கு ஒரு மருத்துவர் அல்லது பிசியோதெரபிஸ்டை அணுகலாம். குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். முன்பு ஏற்பட்ட மூட்டு அல்லது எலும்பு காயங்களை மருத்துவரிடம் தெரிவித்து அவை மீண்டும் பாதிக்கப்படாமல் இருக்க பயிற்சி திட்டத்தை மாற்றி அமைக்கலாம். மூட்டு அல்லது எலும்பு பிரச்சனை உள்ளவர்கள் தவறான பயிற்சிகளை செய்யும் பொழுது காயம் ஏற்படுதல், எலும்புகள் உடைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே உங்களுக்கு ஏற்ற பொருத்தமான பயிற்சி முறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

உடல் அமைப்பு பகுப்பாய்வு

உங்கள் உடல் எடை, தசை நிறை, கொழுப்பு சதவீதம் மற்றும் உடலில் நீர் அளவு ஆகியவற்றை புரிந்து கொள்வது அவசியம். பிஎம்ஐ எனப்படும் உயரத்திற்கு ஏற்ற எடை உள்ளதா என்பதை மதிப்பிட வேண்டும். டெக்ஸா ஸ்கேன் அல்லது பயோ எலக்ட்ரிக்கல் இன்போடென்ஸ் அனாலிசிஸ் மூலம் உடல் கொழுப்பு மற்றும் தசை நிறைய அளவிடலாம். உங்கள் உடல் அமைப்பை அறிந்து எடை குறைப்பு தசை வளர்ப்பு அல்லது ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் போன்ற இலக்குகளுடன் உடற்பயிற்சிகளை தொடங்கலாம். இந்த பகுப்பாய்வு உங்கள் உடற்பயிற்சி திட்டத்தை தனிப்பயனாக்க உதவும். எடுத்துக்காட்டாக அதிக கொழுப்பு உள்ளவர்கள் கார்டியோவை மையமாகக் கொண்ட பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அதே சமயம் தசையை வளர்க்க விரும்புபவர்கள், தசை அதிகரிக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

நுரையீரல் செயல்பாடு

கார்டியோ பயிற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு நுரையீரல் ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த பயிற்சிகளை செய்பவர்கள் நுரையீரல் செயல்பாடு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.ஸபைரோமெட்ரி பரிசோதனை நுரையீரல் திறன் மற்றும் சுவாச செயல்பாட்டை அளவிட உதவும். மூச்சுத்திணறல், ஆஸ்துமா நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்கள் இந்த பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் ஜிம்முக்கு செல்லலாம். ஜிம்மில் ஓடுதல், சைக்கிள் செய்தல் அல்லது கார்டியோ பயிற்சிகள் செய்பவர்களுக்கு நல்ல சுவாசத் திறன் தேவை. நுரையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயிற்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற பரிசோதனை

நீரிழிவு நோய் அல்லது வளர்சிதை மாற்றக் கோளாறு உள்ளவர்கள் ஜிம்மில் பயிற்சி செய்யும் முன்னர் கடந்த மூன்று மாதங்களில் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். மேலும் உடல் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது என்பதை அறிய உதவும் வளர்ச்சிதை மாற்ற விகிதத்தையும் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு உடற்பயிற்சியின் போது ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறையலாம். எனவே அதற்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனையை பெறவேண்டும்.

ஊட்டச்த்து மதிப்பீடு

ஜிம்மில் உடற்பயிற்சியை தொடங்குவதற்கு முன்னர் வைட்டமின் டி, பி12, மக்னீசியம் போன்றவற்றின் குறைபாடுகளை சோதிக்க வேண்டும். ஒரு ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உடற்பயிற்சி இலக்குகளுக்கு ஏற்ப உணவு திட்டத்தை உருவாக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் தீவிரமாக உடற்பயிற்சி செய்தால் சோர்வு, தசை பிடிப்பு அல்லது குறைந்த செயல்திறனை எதிர்கொள்ளலாம். அதேபோல் மன அழுத்தம், பதட்டம் உள்ளவர்கள் உடற்பயிற்சியை மிகைப் படுத்துவதை தவிர்க்க வேண்டும். தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் உடற்பயிற்சியின் பயனை முழுமையாக பெற முடியாது. மனநலப் பிரச்சினைகள் உடற்பயிற்சி திட்டத்தை பாதிக்கலாம். உதாரணமாக அதிகப்படியான உடற்பயிற்சி மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கலாம்.

மருத்துவ ஆலோசனை அவசியம்

ஜிம்முக்கு செல்வதற்கு முன்னர் மேற்கூறிய உடல் பரிசோதனைகளை மேற்கொள்வது என்பது, உங்கள் உடல் நிலையை புரிந்து கொள்ளவும், பயிற்சியின் போது பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும். ஒரு மருத்துவர் பிசியோதெரபிஸ்ட், ஊட்டச்சத்து நிபுணரை அணுகி உங்கள் உடல்நிலை மற்றும் இலக்குகளுக்கு ஏற்ப ஒரு உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்கவும். இந்த பரிசோதனைகள் உங்கள் உடற்பயிற்சி பயணத்தை பாதுகாப்புள்ளதாக மாற்றும்.