நாக்கு புற்றுநோய் என்பது வாய் புற்றுநோயின் ஒரு வகையாகும். இந்த ஆபத்தான புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளை புறக்கணித்தால், அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். நாக்கு புற்றுநோயின் ஏழு அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

நாக்கு புற்றுநோய்

நாக்கின் செல்களில் ஏற்படும் அசாதாரண வளர்ச்சியால் உருவாகும் ஒரு வகை புற்றுநோய் தான் நாக்கு புற்றுநோய். இது நாக்கின் மேற்பரப்பு அல்லது பக்கபாட்டு பகுதிகளில் தோன்றலாம். ஆரம்பகட்டத்தில் இதை கண்டறிவது என்பது சிகிச்சையை எளிதாக்குவதோடு, முழுமையான குணமடையும் வாய்ப்பையும் அதிகரிக்கிறது. நாக்கில் தொடர்ச்சியாக புண்கள் ஏற்படுவது, நிணநீர் கணுக்கள் பெரிதாக மாறுவது ஆகிய சில அறிகுறிகள் நாக்கு புற்றுநோயின் ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகள் ஆகும். இந்த அறிகுறிகளை புறக்கணிக்கும் பட்சத்தில் அது உயிருக்கே ஆபத்தாக கூட முடியலாம். நாக்கு புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் பற்றியும், அவற்றை அடையாளம் காண்பதற்கு நிபுணர்கள் அளித்துள்ள ஆலோசனைகளையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

1.இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் புண்கள்

நாக்குப்பகுதியில் புண்கள் தோன்றுவது இயல்புதான். இதை நாம் அசாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது நாக்கு புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகளில் ஒன்று. நாக்கில் தோன்றும் புண்கள் அல்லது காயங்கள் பல வாரங்கள் குணமடையாமல் இருந்தால் அது புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். இந்த புண்கள் வலியற்றதாகவோ அல்லது லேசான எரிச்சலை ஏற்படுத்துவதாகவும் இருக்கலாம். மருத்துவர்களின் கூற்றுப்படி வாய்ப்புண்கள் 7 முதல் 10 நாட்களுக்குள் குணமாகிவிடும். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் வாய்ப்புண்கள் நீடித்தால் அது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

2.சிகப்பு அல்லது வெள்ளை புள்ளிகள் தோன்றுதல்

நாக்கில் தோன்றும் சிகப்பு புள்ளிகள் (எரித்ரோபிளாக்கியா) அல்லது வெள்ளை புள்ளிகள் (லுகோபிளாக்கியா) ஆரம்பகட்ட புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இந்த புள்ளிகள் பொதுவாக வலியில்லாமல் இருக்கும். ஆனால் அவை அசாதாரண செல் வளர்ச்சியை குறிக்கலாம். அதிக புகையிலை பயன்பாடு, மது அருந்துதல் அல்லது மோசமான வாய் சுகாதாரத்தால் இந்த புள்ளிகள் தூண்டப்படலாம். மருத்துவர்கள் இதை பயாப்ஸி மூலம் பரிசோதிக்க பரிந்துரைக்கின்றனர்.

3.விழுங்குவதில் அல்லது பேசுவதில் சிரமம்

நாக்கு புற்றுநோய் நாக்கின் இயக்கத்தை கடுமையாக பாதிக்கும். உணவை விழுங்குவதில் சிரமம், பேசுவதில் சிரமம், நாக்கை நகர்த்தும் பொழுது விறைப்பு ஏற்படுவது அல்லது நாக்கில் ஒரு விதமான அசௌகரியம் உணரப்படுவது ஆகியவை நாக்கு புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள். இந்த அறிகுறிகள் தொடர்ந்து நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

4.உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு

நாக்கின் ஒரு பகுதியில் உணர்வின்மை அல்லது தொடர்ச்சியான கூச்ச உணர்வு இருப்பது புற்றுநோயின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும். இது பொதுவாக நரம்பு பாதிப்பு அல்லது அசாதாரண செல் வளர்ச்சியால் ஏற்படுகிறது. நிபுணர்கள் இதை ஒரு தீவிர எச்சரிக்கை அறிகுறியாக கருதுகின்றனர்.

5.திடீர் இரத்தப்போக்கு

நாக்கில் இருந்து திடீரென ஏற்படும் ரத்தப்போக்கு, குறிப்பாக எந்தவித காயம் அல்லது புண்கள் இல்லாமல் இருந்தால் அது கவனிக்கப்பட வேண்டிய அறிகுறியாகும். இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியால் ஏற்படும் உட்புற திசு பாதிப்பை குறிக்கிறது.

6.ஒரு பக்கத்தில் ஏற்படும் வலி

நாக்கு புற்றுநோயில் ஆரம்பகட்டத்தில் நாக்கு அல்லது வாயில் தொடர்ச்சியான வலி அல்லது எரிச்சல் ஏற்படும். இது உணவு உட்கொள்ளும் பொழுது அல்லது பேசும்பொழுது இந்த வலி தீவிரமடையலாம். குறிப்பாக ஒரு பக்கத்தில் மட்டும் இந்த வலி அதிகமாக உணரப்படலாம்.

7.காது வலி அல்லது தொண்டை அசௌகரியம்

நாக்கு புற்றுநோய் சில சமயங்களில் காது வலியாகவோ அல்லது தொண்டையில் அசௌகரியமாகவோ வெளிப்படலாம். இது நரம்பு இணைப்புகள் மூலம் பரவும் வழியாக இருக்கலாம். நிபுணர்கள் இதை ரெஃபர்டு பெயின் என்று அழைக்கின்றனர். இது புற்றுநோயின் மறைமுக அறிகுறிகள் ஆகும்.

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

மேற்கூறப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக காது, மூக்கு, தொண்டை நிபுணர் அல்லது பல் மருத்துவரை அணுகவும். பயாப்ஸி மற்றும் இமேஜிங் பரிசோதனைகள் மூலம் ஆரம்ப கட்டத்தில் இந்த புற்றுநோயை கண்டறிய முடியும். புகையிலை, மது, ஹெச்பிவி தொற்று, மோசமான வாய் சுகாதாரம், மரபணு காரணிகள் மூலம் நாக்கு புற்றுநோய் ஏற்படலாம். இவற்றைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் வாய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு, புகையிலை மற்றும் மதுவை தவிர்ப்பது, வாய் சுகாதாரத்தை பராமரிப்பது நாக்கு புற்றுநோயை தடுக்க உதவும்.

மருத்துவ ஆலோசனை அவசியம்

நாக்கு புற்றுநோய் என்பது ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்பட்டால் சிகிச்சை மூலம் முழுமையாக குணமடைய வாய்ப்பு உள்ளது. மேலே குறிப்பிட்ட அறிகுறிகளை கவனித்து சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க, விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள். நாக்கு புற்றுநோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் அது மிகப் பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தி, உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். எனவே வழக்கமான பரிசோதனை மற்றும் தகுதியான மருத்துவரை அணுகி ஆலோசனை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.