மனிதர்களின் ஆயுட்காலத்தை 150ஆக அதிகரிக்க சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய மாத்திரை கண்டுபிடித்துள்ளனர்.

எல்லோருக்கும் பல ஆண்டுகள் வாழ ஆசை இருக்கும். பழங்காலங்களில் ஆயுளை நீட்டிக்க யாகங்களும், பல நம்பிக்கைகளும் பின்பற்றப்பட்டன. உணவு பழக்கங்கள் மாறின. ஆனாலும் மரணம் ஒருநாள் எல்லோரையும் வந்தடைந்தது. ஆனாலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஆயுளை அதிகரிக்கும் நோக்கில் ஏதேனும் முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருந்தன.

இன்றைய காலகட்டத்திலும் மனிதர்களின் வாழும் ஆசை மாறவில்லை. ஆனால் மோசமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், சரியான தூக்கமின்மை, நாள்பட்ட நோய்கள் போன்ற பல காரணிகள் மனிதனின் ஆயுட்காலத்தைக் குறைக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு சராசரி ஆயுட்காலமாக கிட்டத்தட்ட 71.4 ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய கண்டுபிடிப்பை அறிமுகம் செய்துள்ளனர். அது ஆயுளை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன ஆராய்ச்சியாளர்கள் புரோக்யானிடின் சி1 ( Procyanidin C1 (PCC1)) என்ற மூலக்கூறினை கொண்டு வயதாவதைத் தடுக்கும் மாத்திரையை கண்டுபிடித்துள்ளனர். இந்த மாத்திரையை எலிகளின் மீது சோதித்தபோது அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரித்துள்ளது. இந்த மாத்திரை மனிதர்களில் 150 ஆண்டுகளாக ஆயுளை நீட்டிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நியூயார்க் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்த மாத்திரை திராட்சை விதைகளின் சாற்றில் உள்ள ஒரு சேர்மத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஆயுட்காலத்தை நீட்டிக்கும் என நம்பப்படுகிறது. உலகத் தலைவர்களுடைய ஆயுட்காலத்தை நீட்டிக்க உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் பற்றி விவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், ஆயுளை நீட்டிக்கும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. இந்த மாத்திரை ஒவ்வொரு உயரினங்களுடைய இதயத் துடிப்பை பொறுத்துதான் ஆயுட்காலத்தை அதிகரிக்கும்.

சீனாவைச் சேர்ந்த உயிரி தொழில்நுட்ப தொடக்க நிறுவனமான லோன்வி பயோசயின்சஸ் தான் மனித ஆயுட்காலத்தை நீட்டிக்கும் மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளது. இது ஆயுளை நீட்டிக்கும்வகையில் ஜாம்பி செல்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையும், மருத்துவ பராமரிப்பும் இருந்தால் இந்த மாத்திரைகள் மக்களின் ஆயுளை 100 முதல் 120 ஆண்டுகளாக மாற்றும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது கவர்ச்சிகரமாக தோன்றினாலும் இதற்கு இன்னும் நிறைய கிளினிக்கல் சோதனைகள் தேவை என ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக உயிரி மருத்துவ ஆராய்ச்சி மையமான பக் நிறுவன இணைப் பேராசிரியர் டேவிட் ஃபர்மன் நியூயார்க் டைம்ஸில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.