உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பு ஏற்படுவதை உணர்த்தும் சில அறிகுறிகளை இந்த குறித்து இந்த பதிவில் காணலாம்.

சமீப காலமாகவே மாரடைப்பு இறப்புகள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உடற்பயிற்சி செய்யும் போது நிறைய பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது குறித்த செய்திகளை கேட்டாலோ நெஞ்சமெல்லாம் பதறுகிறது. இதுபோல நாமும் உடற்பயிற்சி செய்தால் மாரடைப்பால் இறந்து விடுவோமோ என்ற அச்சத்தால் நமக்குள் கேள்வி எழுகிறது.

ஆனால் உண்மை என்னவென்றால், அதிகப்படியான உடற்பயிற்சி செய்தாலோ அல்லது ஏற்கனவே இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தவர்களளுக்கு தான் உடற்பயிற்சி போது மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.

அதுபோல உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் ஒரு சில அறிகுறிகளும் தோன்றும். வழக்கத்திற்கு மாறாக தோன்றும் அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே நீங்கள் கவனித்தால் உடனே மருத்துவமனைக்கு சென்று அதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், ஜீவனை தான் இழப்பீர்கள். இந்த பதிவில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் மாரடைப்பை உணர்த்தும் சில அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மாரடைப்பை உணர்த்தும் அறிகுறிகள் :

1. லேசான தலைவலி அல்லது தலை சுற்றல்

நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது திடீரென லேசாக தலை வலித்தாலோ அல்லது தலை சுற்றல் ஏற்பட்டாலோ அது மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம். ஏனெனில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது இதயத்திற்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் மூளையில் ரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதன் காரணமாக லேசான தலைவலி அல்லது தலை சுற்றல் ஏற்படும். எனவே இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவர் அணுகுவது நல்லது.

2. அதிகப்படியான சோர்வு அல்லது பலவீனம்

உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போது திடீரென அதிகப்படியான சோர்வு அல்லது பலவீனமாக உணர்ந்தால் அதை அசால்டாக எடுத்துக் கொள்ளாதீங்க. ஏனெனில் அது மாரடைப்பு வருவதற்கான அறிகுறியாக இருக்கலாம். எனவே இந்த அறிகுறிகள் வெளிப்பட்டால் உடனே மருத்துவர் அணுகுங்கள்.

3. தாடை, கை மற்றும் தோள்பட்டை வலி

மாரடைப்பின் முக்கியமான அறிகுறி நெஞ்சுவலி என்றாலும் சில சமயங்களில், நெஞ்சுவலியானது கைகள் வரை அதுவும் குறிப்பாக இடது கை, தாடை, தோள்பட்டை வரையும் பரவுமாம். எனவே நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது இந்த அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை சந்திக்கவும்.

4. சுவாசிப்பதில் அதிக சிரமம்

உடற்பயிற்சி செய்யும் போது வழக்கத்திற்கு மாறாக சுவாசிப்பதில் அதிகமாக சிரமத்தை நீங்கள் உணர்ந்தால் அதை அசால்ட்டாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுவது தான் நல்லது. ஏனெனில் அது மாரடைப்பின் அறிகுறியாகும். உங்களது இதய துடிப்பு மோசமாக இருந்தாலும் அல்லது நுரையீரலுக்கு சரியாக ஆக்ஸிஜன் கிடைக்காமல் இருந்தால் மட்டுமே இந்த பிரச்சனை ஏற்படும்.

5. அதிகப்படியான வியர்வை

உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை வருவது சகஜம்தான். ஆனால் அதிகப்படியான வியர்வை வந்து உடல் முழுவதும் நனைந்தால் அது சாதாரணமான விஷயம் அல்ல. மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதயத்தை பம்ப் செய்ய கடினமாக உழைத்தல் அல்லது அதிகப்படியான மன அழுத்தத்தில் இருக்கும் போது இப்படி அதிகமாக வியக்கும்.