மட்டன் கீமாவில் வடை செஞ்சு, புளிப்பு-இனிப்பு தயிர் கிரேவியில் ஊறவைச்சு சாப்பிட்டா எப்படி இருக்கும்? தாகூர் குடும்பத்தோட இந்த ராஜரகசிய ரெசிபியை 5 ஸ்டெப்ல வீட்லயே செய்யலாம்.

ராஜாங்க சாப்பாடு: செஞ்சா சாப்பிட்டா ஊரே மணக்கும்.!

ஜோராசங்கோ தாகூர் குடும்பத்து சமையலறை ஒருகாலத்துல பெரிய பரிசோதனைக்கூடமாவே இருந்திருக்கு. அங்க உருவான ஒரு ஸ்பெஷல் டிஷ்தான் "மாங்ஷோர் டோய் போரா", அதாவது 'மட்டன் தயிர் வடை'. அந்த குடும்பத்தை சேர்ந்தவர்தான் நம்ம கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்.

பேரைக் கேட்டு மிரள வேண்டாம். மட்டன் கொத்துக்கறியில வடை செஞ்சு, அதை கெட்டியான, புளிப்பு-இனிப்பு சுவையுள்ள தயிர்ல ஊறவைக்குறதுதான் இந்த டிஷ். ரிசல்ட்? பஞ்சு மாதிரி சாஃப்ட்டான வடையும், கிரீமியான தயிர் கிரேவியும் கிடைக்கும். சூடான சாதம் அல்லது புலாவ் கூட இதை சாப்பிடலைனா லைஃப் வேஸ்ட் பாஸ்.

* தேவையான பொருட்கள்:

வடை செய்ய:
1. மட்டன் கொத்துக்கறி - 50 கிராம் (கொழுப்பு இல்லாதது)
2. வெங்காய விழுது - 2 டேபிள் ஸ்பூன்
3. இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
4. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
5. கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன் (வடை உடையாமல் இருக்க)
6. உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
7. பொரிக்கத் தேவையான கடுகு எண்ணெய்

தயிர் கிரேவிக்கு:
1. புளித்த தயிர் - 40 கிராம் (நன்றாகக் கடைந்தது)
2. கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
3. கறுஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
4. மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
5. சர்க்கரை - 1 டீஸ்பூன்
6. உப்பு - தேவையான அளவு
7. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - அலங்கரிக்க

* செய்முறை:

வடை தயாரிக்கும் முறை: கொத்துக்கறியுடன் வெங்காய விழுது, இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும். இதை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, சின்ன சின்ன உருண்டைகளாக வடை தட்டி, சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

தயிர் கலவை: ஒரு பாத்திரத்தில் தயிர், உப்பு, மஞ்சள் தூள், சர்க்கரை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக அடித்துக்கொள்ளவும்.

தாளிப்பது: வாணலியில் 2 ஸ்பூன் கடுகு எண்ணெய் விட்டு சூடாக்கவும். கறுஞ்சீரகம் போட்டு தாளிக்கவும். வாசனை வந்ததும் அடுப்பைக் குறைத்துவிடவும்.

கிரேவி செய்வது: இப்போது அடித்து வைத்த தயிரை வாணலியில் ஊற்றவும். தயிர் திரிந்துவிடாமல் இருக்க, அடுப்பை 'சிம்'மில் வைத்து கைவிடாமல் கிளறவும். 3-4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

ஃபைனல் டச்: கிரேவி லேசாகக் கொதித்ததும், பொரித்து வைத்த மட்டன் வடைகளை மெதுவாக அதில் சேர்க்கவும். 2 நிமிடங்கள் மூடி போட்டு வேகவைக்கவும். பிறகு, அடுப்பை அணைத்து 10 நிமிடங்கள் அப்படியே விடவும். இதனால், வடை கிரேவியை நன்றாக உறிஞ்சிக்கொள்ளும். மேலே கொத்தமல்லி தழை தூவி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.

* பெர்ஃபெக்ட் தயிர் வடைக்கான 3 சீக்ரெட்ஸ்:

1. தயிர் திரியாமல் இருக்க: தயிரை கிரேவியில் சேர்க்கும்போது அடுப்பு குறைந்த தீயில் இருக்க வேண்டும். கைவிடாமல் கிளறுவது அவசியம்.
2. வடை கல்லு மாதிரி ஆகாமல் இருக்க: கொத்துக்கறியை ரொம்ப இறுக்கமாகப் பிசைய வேண்டாம். பொரிக்கும்போது அதிக நேரம் எண்ணெயில் விட வேண்டாம்.
3. புளிப்பு-இனிப்பு பேலன்ஸ்: தயிர் மிகவும் புளிப்பாக இருந்தால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்ப்பது கட்டாயம். இல்லையென்றால் சுவை சரியாக இருக்காது.

இது வெறும் சாதாரண மட்டன் ரெசிபி இல்லை, இது ஒரு வரலாறு. ஒருமுறை செய்து பாருங்கள், வீட்டில் உள்ள அனைவரும் விரல் சப்புவார்கள். புலாவ், ஃபிரைடு ரைஸ் அல்லது வெள்ளை சாதம் என எல்லாவற்றுடனும் இது பக்காவாக செட் ஆகும்.