கும்பகோணம் என்றதும் நினைவிற்கு வருவது கோவில்கள் தான். ஆனால் இங்கு பிரபலமான உணவுகள் பல உள்ளன. அவற்றில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் விருப்பமான ஸ்நாக் தவலை வடை. இது பல பருப்பு சேர்த்து செய்வதால் உடலுக்கு ஆரோக்கியமாகவும், வயிற்றிற்கு நிறைவாகவும் இருக்கும்.
மொறு மொறு தவளை வடையின் சுவைக்கு அதன் செய்முறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் மற்றும் அரைக்கும் முறையும் ஒரு முக்கிய காரணம். பருப்புகளை ரொம்பவும் நைசாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைக்கும்போது வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும் உட்புறம் மென்மையாகவும் இருக்கும். மேலும், எண்ணெயின் சரியான வெப்பநிலையில் பொரிப்பதும் இதன் மொறுமொறுப்புத் தன்மைக்கு முக்கியம்.
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 கப்
கடலைப் பருப்பு - 1/4 கப்
உளுத்தம் பருப்பு - 1/4 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
பச்சரிசி - 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2-3
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - சிறிதளவு
பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
மொறு மொறு தவளை வடை செய்முறை:
துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் பச்சரிசி ஆகியவற்றை நன்றாகக் கழுவிய பின்னர் போதுமான தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப் பருப்பை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
ஊறவைத்த பருப்பு மற்றும் அரிசியுடன் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்துடன் சேர்த்து ரொம்பவும் நைசாக அரைக்காமல், சற்று கொரகொரப்பாக அரைக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. பருப்பில் உள்ள ஈரப்பதமே போதுமானதாக இருக்கும்.
அரைத்த பருப்புக் கலவையுடன் தனியாக ஊறிய பாசிப் பருப்பை அப்படியே சேர்க்கவும், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கைகளில் சிறிது தண்ணீர் அல்லது எண்ணெய் தடவிக் கொள்ளவும். சிறிது மாவை எடுத்து உள்ளங்கையில் வைத்து மெதுவாகத் தட்டவும், வாணலியில் எண்ணெய் சூடானதும் தட்டி வைத்துள்ள வடைகளை மெதுவாக எண்ணெயில் போடவும், வடைகளை அவ்வப்போது திருப்பி விட்டு பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை பொரிக்கவும். வடை நன்றாக வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்து எண்ணெய் வடிகட்டியில் அல்லது டிஷ்யூ பேப்பரில் வைக்கவும்.
பரிமாறுதல்:
சூடான மொறுமொறுப்பான தவளை வடைக்கு அருமையான காம்பினேஷன் கெட்டியான தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.


