கொங்குநாட்டில் பிரபலமான பல உணவுகளில் ஒன்று பருப்பு குழம்பு. சாம்பார் போலவும் இல்லாமல், காரக் குழம்பு போலவும் இல்லாமல் வித்தியாசமான சுவை கொண்டதாக இந்த குழம்பு இருக்கும். தனித்துவமான இதன் சுவை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.

கொங்குநாட்டு சமையல் என்பது தனித்துவமான மணமும், சிறந்த ஆரோக்கிய நன்மைகளும் கொண்ட உணவுகளுக்கு பிரபலமானது. அந்த வரிசையில், கொங்குநாட்டு பருப்பு குழம்பு, உணவு பிரியர்களுக்கு விருந்தாக அமையும். இது சத்துமிகுந்ததும், எளிதாக செரிப்பதுமான ஒரு ஆரோக்கியமான உணவு. சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும் இதை எப்படி செய்வது என வாங்க பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1/2 கப் (நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊறவைத்தது)
முருங்கைக்காய் - 4 துண்டுகள்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பூண்டு - 4 பல் (முழுவதுமாக)
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1/2 இன்ச் துண்டு (நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு (நீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும்)
கொத்தமல்லி - அலங்காரத்திற்கு

காலையில் இந்த பழக்கங்கள் உங்களுக்கு இருக்கா? உடனே மாத்துங்க...இல்லைன்னா பிரச்சனை தான்

செய்முறை:

- துவரம் பருப்பை வேக வைத்து, அதனுடன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து குழைவாக வரும் வரை குக்கரில் 3 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சீரகம், பூண்டு, கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து மணம் வீசும் வரை வதக்கவும். பின், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு குழையும்படி வதக்கவும்.
- மசாலாவிற்கு தனியா தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, வேக வைத்த பருப்பை இதில் ஊற்றி கிளறவும்.
- இப்போது புளி கரைத்த நீரை சேர்த்து, முருங்கைக்காய் சேர்த்து 5-7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
- கொங்குநாடு பருப்பு குழம்பு தயாரானதும், மேலே கொத்தமல்லி தூவி, சூடாக வெந்த சாதத்துடன் பரிமாறவும்.

சிறப்பு குறிப்புகள்:

_ கூடுதல் மணம் வேண்டுமென்றால், சிறிது வெங்காயத்தை வறுத்து சேர்க்கலாம்.
- முருங்கைக்காய் இல்லையென்றால், சுரைக்காய், பாகற்காய் போன்ற காய்கறிகளை சேர்த்துப் பார்க்கலாம்.
- சூடாக பரிமாறினால், குழம்பின் சுவை இரட்டிக்கும்.

பாரம்பரிய உணவுகளை ருசிக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்த உணவாகவும், வித்தியாசமான சுவையையும் கொடுக்கும். துவரம் பருப்பு சேர்த்து சாம்பார் தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இந்த பருப்பு குழம்பி அற்புதமான சுவை கொண்டதாகும்.