நாம் தினசரி கடைப்பிடிக்கும் சிறிய பழக்கவழக்கங்களால் உடல்நலம் மிகுந்த பாதிப்பை அடையலாம். காலையில் சீரான மற்றும் ஆரோக்கியமான நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலம் நீண்ட காலத்திற்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதே போல் காலையில் கண்டிப்பாக செய்யக் கூடாத, தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. இவற்றால் பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க வேண்டி இருக்கும்.

தினமும் காலை நேரத்தில் நாம் மேற்கொள்ளும் சில தவறான செயல்பாடுகள் உடல்நலத்தினை பெரிதும் பாதிக்கக்கூடியவை. சில பழக்க வழக்கங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் முக்கிய காரணிகளாகும். அதிகளவில் உறங்குவது, காலை உணவை தவிர்ப்பது, போதிய நீரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது போன்றவற்றால் உடல்நலம் பாதிக்கப்படும். இங்கு காலை நேரத்தில் தவிர்க்க வேண்டிய 5 பழக்கவழக்கங்கள் பற்றிய தகவல்களை விரிவாக காணலாம். இந்த பழக்கங்கள் உங்களுக்கும் இருந்தால் உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். இல்லை என்றால் பலவிதமான உடல்நல பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

காலையில் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள் :

1. அதிக நேரம் உறங்குவது : 

நல்ல உறக்கம் உடலுக்கு அவசியம் தான். அதே நேரத்தில் அதிக நேரம் உறங்குவதால் பல்வேறு உடல் குறைபாடுகள் உருவாகலாம். அதிக நேரம் உறங்குவது மெட்டபாலிசத்தை குறைக்கும். உடல் சோர்வடையச் செய்யும், மனச்சோர்வையும் ஏற்படுத்தும். இதன் விளைவாக மன அழுத்தம், எடை அதிகரிப்பு, மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படக்கூடும்.

2. காலை உணவை தவிர்ப்பது : 

காலை உணவு நம்முடைய உடலுக்கு எரிசக்தியை வழங்கும். காலை உணவை தவிர்ப்பதால் உடலின் ரத்த சர்க்கரை நிலை குறையக்கூடும், இதனால் ஒரே நேரத்தில் சோர்வு, தலைவலி போன்றவை ஏற்படும். மேலும் நீண்ட காலத்திற்கு இது சர்க்கரை நோய், இருதய நோய்கள் மற்றும் மெட்டபாலிசம் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். தினமும் ஆரோக்கியமான புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவை உட்கொள்வது மிக முக்கியம்.

3. போதிய நீரை குடிக்காமல் இருப்பது : 

காலை எழுந்தவுடன் நீரை பருகுவது உடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. காலை நேரத்தில் நீர் இல்லாமல் இருப்பது உடலின் டாக்ஸின்களை வெளியேற்றுவதை தடுக்கிறது மற்றும் பாக்டீரியா வளர்ச்சிக்கு காரணமாகிறது. அதிகப்படியான நீர் குறைபாடு தோல் வறட்சியை ஏற்படுத்துவதோடு, சிறுநீரக கோளாறுகளுக்கும் காரணமாகலாம்.

4. உடற்பயிற்சியை தவிர்ப்பது : 

காலை நேரத்தில் எளிய உடற்பயிற்சிகள், யோகா அல்லது நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளும் போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும். உடற்பயிற்சியை தவிர்ப்பதால் மெட்டபாலிசம் குறையும், எடை அதிகரிக்கும் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் மற்றும் சோர்வு அதிகரிக்கும்.

5. அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவது

காலை எழுந்தவுடன் மொபைல் பயன்படுத்துவதால் மன அழுத்தம் அதிகரிக்கும். அதிக நேரம் மொபைல் பயன்படுத்துவதால் மூளை செயல்பாடு குறையலாம், கவனக்குறைவு ஏற்படலாம், உறக்க கோளாறுகளுக்கு காரணமாகலாம். இதுவே கண்களின் சோர்வையும், மன உளைச்சலையும் அதிகரிக்கச் செய்யலாம்.

6. சரியான உடல் இயக்கம் :

காலையில் உடலை மெதுவாக நீட்டிப்பது முக்கியமான ஒரு செயலாகும். உடலை முறையாக நீட்டிக்காமல் இருப்பது மூட்டுவலி, தசை கடினத்தன்மை மற்றும் உடல் சிதைவுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும்.

7. முறையாக சுவாசிப்பதை தவிர்ப்பது : 

காலை நேரத்தில் முறையான ஆழ்ந்த சுவாசிப்பை தவிர்ப்பது உடல் ஆக்சிஜன் அளவை குறைத்து மூளையின் செயல்பாட்டை பாதிக்கும். தினமும் சில நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் மன அமைதி பெறலாம்.