பலருக்கு எலும்பு தேய்மானம், எலும்பு பலவீனம், முதுகு வலி பிரச்சனையை தீர்க்க வீட்டிலேயே இருக்கும் எளிமையான ஒரு பொருள் தான் கருப்பு உளுந்து. இதில் வித்தியாசமாக ஒரு உருண்டை செய்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை அடைவதை நீங்களே உணர முடியும்.

புரதம், நார்ச்சத்து, மற்றும் பல்வேறு தாதுக்கள் நிறைந்த உளுந்து, உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடியது. குறிப்பாக, கால்சியம், மக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உளுந்தில் அதிக அளவில் உள்ளன. இந்த சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தவும், எலும்பு தேய்மானத்தை தடுக்கவும் உதவுகின்றன.

தேவையான பொருட்கள்:

கருப்பு உளுந்து- ½ கப்

வெள்ளை உளுந்து- ½ கப்

பொட்டுக்கடலை - 1 கப்

வெல்லம் (தூளாக்கியது) - 2 கப்

தேங்காய் துருவல் - 1/4 கப்

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

நெய் - 2 தேக்கரண்டி

முந்திரி மற்றும் பாதாம் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

முதலில், கருப்பு மற்றும் வெள்ளை உளுந்தை நன்றாகக் கழுவி, காயவைக்கவும். பிறகு அடுப்பில் ஒரு கடாய வைத்து சூடானதும் உளுந்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

வறுத்த உளுந்துடன் பொட்டுக்கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது ஏலக்காய் தூள் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

ஒரு கடாயில் நெய் விட்டு சூடானதும் முந்திரி மற்றும் பாதாம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

அரைத்த மாவுடன் வறுத்த முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து கையில் லேசாக நெய் தடவிக்கொண்டு, சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான மற்றும் சத்தான உளுந்து உருண்டைகள் தயார்.

இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.

உளுந்து உருண்டையின் கூடுதல் நன்மைகள்:

உளுந்தில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான சக்தியை கொடுக்கும்.

நார்ச்சத்து இருப்பதால் செரிமான மண்டலத்தை சீராக வைக்க உதவுகிறது.

இரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

புரதம் தசைகளின் வளர்ச்சிக்கும், பழுது பார்ப்பதற்கும் உதவுகிறது.

இந்த உளுந்து உருண்டைகளை குழந்தைகளுக்கு கொடுப்பது அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பெரியவர்களும் இதை தினமும் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.