கைவிட்டு போன மயிலாப்பூர்.! அதிமுக புள்ளி திமுகவில் இணைய இது தான் காரணமா.?
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த மைத்ரேயன் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் போக்கு சரியில்லை, பாஜக திட்டமிட்டு அதிமுகவைக் கையில் வைத்துக்கொண்டு செயல்படுவதாகவும் மைத்ரேயன் குற்றம் சாட்டியுள்ளார்.

சூடு பிடிக்கும் தேர்தல் களம்
தமிழக சட்ட மன்ற தேர்தல் நெருங்க, நெருங்க அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பல்டி அடிக்கும் நிகழ்வு தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் முதல் கட்சி பணி செய்து வந்த முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார். அடுத்ததாக புதுக்கோட்டை ராஜா வாரிசு கார்த்தி தொண்டைமான் இணைந்தார். தற்போது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்த மைத்ரேயன் தற்போது திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் இணையும் அதிமுக நிர்வாகிகள்
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நிகழ்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை RSS தொடங்கியவர், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பல்வேறு பொறுப்புகளையும் வகித்துள்ளார். 2001ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தவர் மாநிலங்களவைக்கு அதிமுக சார்பாக 3 முறை தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பங்களால் ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு சென்றவர் மீண்டும் எடப்பாடி அணிக்கு மாறினார். அடுத்ததாக பாஜகவிற்கு சென்றவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.
திமுகவில் மைத்ரேயன்
அதிமுகவில் அமைப்பு செயலாளர் பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால் தன்னை உரிய முறையில் அதிமுக பயன்படுத்திக் கொள்ளவில்லையெனக்கூறி இன்று திமுகவில் இணைந்துள்ளார். இது தொடர்பாக மைத்ரேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவின் போக்கு சரியாக இல்லை, எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியை அறிவித்துள்ளார்.
ஆனால் அந்த கூட்டணியை அறிவித்ததே அமித்ஷா தான்.. ஒரு சிலர் திட்டமிட்டு அதிமுகவை அவர்கள் கைகளில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். அதிமுகவில் என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை.அதிமுக பாஜக கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லையென கூறினார்.
மைத்ரேயன் விலக காரணம் என்ன.?
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து மைத்ரேயன் விலகியதற்கு மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அந்த வகையில் ராயபுரம் தொகுதியில் தொடர்ந்து பல முறை வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியவர் தனது தோல்விக்கு பாஜக தான் காரணம் என கூறினார்.
ராயபுரம் தொகுதியில் பெரும்பாலான மக்கள் சிறுபான்மையின மக்கள். பாஜக கூட்டணி அமைக்கப்பட்டதால் தோல்வி அடைந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து தற்போதும் அதிமுக- பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது.
தொகுதி மாறும் ஜெயக்குமார்
எனவே மீண்டும் ராயபுரம் தொகுதியி் போட்டியிட்டால் தோல்வி பெறுவோம் என்ற அச்சத்தால் மயிலாப்பூர் தொகுதிக்கு ஜெயக்குமார் தாவவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மயிலாப்பூர் தொகுதி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த மைத்ரேயன் ஏமாற்றம் அடைந்துள்ளார். எனவே அதிமுகவில் தொடர்ந்து இருந்தால் வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தால் திமுகவில் மைத்ரேயன் இணைந்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.