அதிமுக மாஜி எம்பியை தட்டித்தூக்கிய ஸ்டாலின்.! அதிர்ச்சியில் எடப்பாடி
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவைத் தொடர்ந்து, அதிமுக மாஜி எம்பி மைத்ரேயன் திமுகவில் இணைகிறார். RSS இல் தொடங்கி, பாஜக, அதிமுக, மீண்டும் பாஜக, மீண்டும் அதிமுக என பல்வேறு கட்சிகளில் பயணித்த மைத்ரேயன் தற்போது திமுகவில் இணைகிறார்.

திமுகவில் இணையும் அதிமுக நிர்வாகிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு பல்டி அடிக்கும் நிகழ்வு தொடங்கியுள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த நிலையில், தற்போது அதிமுக மாஜி எம்பி மைத்ரேயன் திமுகவில் இன்று இணையவுள்ளார். மைத்ரேயன் தனது அரசியல் பயணத்தை RSS தொடங்கினார். 1991ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து, தமிழ்நாடு பிரிவின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றினார்.
மைத்ரேயன் அரசியல் பயணம்
இதனை தொடர்ந்து தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அடுத்தாக பாஜகவில் இருந்து விலகியவர் , முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் அதிமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து 2001-ஆம் ஆண்டு மயிலாப்பூர் தொகுதியில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனை தொடரந்து மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து மூன்று முறை (2002-2014) மாநிலங்களவை எம்.பி.யாக பணியாற்றினார்.
3 முறை மாநிலங்களவை எம்பி
ஜெயலலிதா ஆட்சியில் முக்கிய பொறுப்புகளை வகித்து, குறிப்பாக டெல்லியில் அதிமுக தொடர்பான நிகழ்வுகளை கவனித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் காரணமாக மைத்ரேயன், ஓ. பன்னீர்செல்வம் (OPS) தலைமையிலான "தர்மயுத்தம்" அணியில் இணைந்தார். இதனையடுத்து எடப்பாடி தரப்புக்கு மாறினார். இருப்பினும், அங்கும் முக்கியத்துவம் இல்லாததால் மீண்டும் ஓபிஎஸ் தரப்புக்கு திரும்பினார். இதனையடுத்து கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் பாஜகவிற்கே மைத்ரேயன் திரும்பினார். அவருக்கு தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
திமுகவில் இணையும் மைத்ரேயன்
சில மாதங்கள் மட்டுமே பாஜகவில் இருந்தவர் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பினார். அவருக்கு அதிமுவின் அமைப்பு செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த சூழ்நிலையில் தற்போது அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணையவுள்ளார் மைத்ரேயன். திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் இன்று திமுகவில் இணையவுள்ளார்.
மைலாப்பூர் தொகுதியை குறிவைத்து மைத்ரேயன் பணியாற்றி வரும் நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தற்போது ராயபுரம் தொகுதியில் இருந்து மைலாப்பூர் தொகுதிக்கு மாறுவதால் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற காரணத்தால் திமுகவில் மைத்ரேயன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.