- Home
- Tamil Nadu News
- விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! ஆட்டத்தை ஆரம்பிக்கும் திமுக..? பிளான் 2.0 கையிலெடுத்த தவெக!
விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! ஆட்டத்தை ஆரம்பிக்கும் திமுக..? பிளான் 2.0 கையிலெடுத்த தவெக!
விஜய் பிரசாரத்துக்கு காவல்துறை தடை விதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

தேர்தல் களத்தில் தவெக
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கருதப்படும் நடிகர் விஜய்யின் தவெக தேர்தலில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக அண்மையில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தி முடித்தது. இதில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டனர்.
விஜய் பிரசாரத்துக்கு போலீஸ் மறுப்பு
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தலைவர் விஜய், நேரடியாக மக்களை சந்தித்து பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதாவது வரும் 13ம் தேதி முதல் திருச்சியில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். இதற்காக தவெக பொதுச்செயலாளர் விஜய், திருச்சி காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி கோரி கடிதம் அளித்தனர். ஆனால் விஜய் பிரசாரத்துக்கு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
விஜய் பிரசாரம் செய்யும் இடங்கள்
அதாவது சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை எனக்கூறிய காவல்துறை சில குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் விஜய் பிரசார திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து தொடங்கி டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தவெக குற்றச்சாட்டு
ஏற்கெனவே தவெகவின் முதல் மாநாடு திருச்சியில் நடக்க போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை என தகவல் வெளியாகி இருந்தது. இப்போது விஜய் பிரசாரத்துக்கும் நெருக்கடி கொடுக்கப்படுகிறது. விஜய் மீதான பயத்தில் ஆளுங்கட்சி இப்படி செய்வதாக தவெகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், தி.மு.க அராஜக அரசுக்கு எதிராக இயக்கம் கண்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தபோது அதை தங்கள் அதிகாரம் கொண்டு அடக்க நினைத்தது அன்றைய ஆளும் அரசு. அந்த அதிகார சக்திகளின் ஆட்டத்திற்கு அடுத்தத் தேர்தலிலேயே முடிவுரை எழுதினார் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
விஜய்க்கு நெருக்கடி
இன்று எங்கள் தலைவரும் தமிழக மக்களின் ஒரே நம்பிக்கையுமான த.வெ.க தலைவர் விஜய் அவர்களின் சுற்றுப்பயணத்தை தடுக்கும் நோக்கில் தங்கள் அதிகார பலத்தைக் கொண்டு காவல்துறையின் மூலம் நெருக்கடி கொடுக்க முனைகிறது இன்றைய தி.மு.க அரசு. மக்கள் தலைவராக விஜய் அவர்களுக்கு இருக்கும் பேராதரவை பொறுத்துக்கொள்ள முடியாத அச்சத்தின் வெளிப்பாடாகவே அரசின் இந்த அதிகார அழுத்தத்தை பார்க்கவேண்டியுள்ளது.
திமுக ஆட்சிக்கு முடிவுரை
ஜனநாயக நாட்டில் எந்தத் தலைவரும் மக்களை சந்திப்பதை எப்பேர்ப்பட்ட அதிகார சக்தியாலும் தடுக்க முடியாது. அப்படி தடுக்க நினைத்த அதிகார சக்திகளை மக்களே தூக்கி எறிந்திருக்கிறார்கள் என்பதுதான் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். மக்களே மகத்தான ஆசான்கள்… அவர்களே உங்கள் அதிகாரத்திற்கு முடிவுரை எழுதுவார்கள்'' என்று தவெகவின் ஆதவ் அர்ஜூன தெரிவித்துள்ளார்.