பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் விஜய்யுடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
OPS & TTV to join Vijay’s TVK? TN politics heats up! தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், மத்தியில் ஆளும் பாஜகவும் கூட்டணி வைத்துள்ளன. அதிமுக கூட்டணி சேர்ந்த பிறகு, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கெனவே கூட்டணியில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் எதிரிகளான ஓபிஎஸ்க்கும், அமமுகவின் டிடிவி தினகரனுக்கும் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதை உணர்ந்த ஓபிஎஸ், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார்.
பாஜக கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரன்
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக இப்போது அதிரடியாக அறிவித்துள்ளார். அதிமுகவின் அழுத்தத்தால் பாஜக தங்களை கண்டுகொள்ளவில்லை என விரக்தியில் இருந்து வந்த டிடிவி தினகரன், இன்று வெளிப்படையாக தனது முடிவை அறிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணியில் துரோகம் தலைவிரித்தாடுவதால் அங்கு இருந்து விலகியதாக டிடிவி தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இருந்து வெளியேறியது ஏன்?
அதாவது எடப்பாடி பழனிசாமியை துரோகி என மறைமுகமாக குறிப்பிட்ட டிடிவி தினகரன், ''துரோகிகள் திருந்துவார்கள் என நினைத்திருந்தோம். ஆனால் அவர்கள் திருந்தவில்லை. ஆகையால் வெளியேறுகிறோம்'' என்று கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
விஜய்யுடன் கைகோர்க்கும் டிடிவி
ஏற்கெனவே செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்க, அவரும், சசிகலா, டிடிவி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் ஓரணியில் திரள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே வேளையில் ஓபிஎஸ்ஸும், டிடிவியும் விஜய்யின் தவெக கூட்டணிக்கு செல்லலாம் என அரசியல் நிபுணர்கள் ஆருடம் கூறுகின்றனர். ஏனெனில் சில நாட்களுக்கு முன்பு தவெகவை புகழ்ந்து பேசியிருந்த டிடிவி தினகரன், ''2006 தேர்தலில் விஜயகாந்த் எப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாரோ, அதேபோல் 2026 தேர்தல் விஜய்யும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று நான் நினைக்கிறேன். இது அனைத்து கட்சிகளுக்குமே பாதிப்பை ஏற்படுத்தலாம். இதுதான் யதார்த்தம்'' என்று கூறியிருந்தார்.
கூடவே செல்லும் ஓபிஎஸ்
ஆகையால் அவர் விஜய்யுடன் கைகோர்க்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதேபோல் தனியாக நிற்கும் ஓபிஎஸ்ஸும் டிடிவியுடன் சேர்ந்து விஜய் பக்கம் ஒதுங்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏனெனில் விஜய்யுடன் கூட்டணி செல்வீர்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், ''எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்'' என்று கூறினார். ஆகவே அவரும் விஜய் மீது ஒரு கண் வைத்துள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே இவர்கள் இருவரும் விஜய்யுடன் ஐக்கியமாவார்களா? இல்லை சசிகலா, செங்கோட்டையுடன் இணைந்து ஓரணியாக திரள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
