- Home
- Tamil Nadu News
- முதலமைச்சர் வேட்பாளரை அமித்ஷா அறிவிப்பார்.! அமைச்சரவையில் பங்கு-இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த டிடிவி
முதலமைச்சர் வேட்பாளரை அமித்ஷா அறிவிப்பார்.! அமைச்சரவையில் பங்கு-இபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த டிடிவி
அதிமுக கூட்டணியில் அமமுக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டிடிவி தினகரன் கூட்டணி ஆட்சி மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது. இன்னும் 8 முதல் 9 மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே கிளைக்கழகம் முதல் மாவட்ட நிர்வாகம் முதல் கட்சிப்பணிகளை துரிதப்பட்டு அரசியல் கட்சிகள் உத்தரவிட்டு வருகிறது. பல்வேறு தொகுதிகளில் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம், செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகிறது.
அந்த வகையில் திமுக தனது தலைமையில் உள்ள கூட்டணி கட்சிகளை பிரிந்து செல்லாத வகையில் பாதுகாத்து வருகிறது. அதே நேரத்தில் அதிமுக திமுகவை வீழ்த்தும் வகையில் கூட்டணியை உருவாக்கி வருகிறது. இதில் முதல் கட்டமாக பாஜகவை தனது கூட்டணியில் இணைத்துள்ளது.
ஆனால் பாஜக தலைமை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என தெரிவித்து வருகிறது. இதனை அதிமுக தலைமை ஏற்றுக்கொள்ளாமல் உள்ளது. இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்யை அதிமுகவில் சேர்ப்பதற்கு நோ சொன்னவர், டிடிவி தினகரனை கூட்டணியில் இணைக்க கிரீன் சிக்னல் கொடுத்திருந்தார்.
அந்த வகையில் அ.ம.மு.க உங்கள் கூட்டணியில் இடம்பெறவாய்ப்பு உள்ளதா? என்பதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி 'காலம் பதில் சொல்லும்' என்று தெரிவித்திருந்தார். எனவே அதிமுக கூட்டணியில் அமமுக இணையும் என எதிர்பார்த்திருந்த நிலையில் அதிமுகவினருக்கு ஷாக் கொடுக்கும் வகையில் டிடிவி தினகரன் கூட்டணி ஆட்சி, முதலமைச்சர் வேட்பாளர் தேர்வு போன்றவற்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சியில் பல்வேறு கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அக்கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், நான் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறேன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மீது அன்கண்டிஷனல் சப்போட்டாக இருக்கிறேன்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்ப அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் தான் இருக்கும். இவை அனைத்தும் அடுத்த ஆறு ஏழு மாதங்களில் ஆட்சி மாற்றத்திற்கு பின் சரியாகிவிடும்.
தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து கூட்டணி மந்திரி சபை அமையும். திமுக ஆட்சியை அகற்றி எங்களுடைய கூட்டணி ஆட்சி என்பது கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் அனைத்தும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறுவார்கள் என தெரிவித்தார்.
முதலமைச்சர் வேட்பாளர் யார் என அமித்ஷா அறிவிப்பார் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்தார். அன்வர் ராஜா புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர் அம்மாவுடைய தீவிர விசுவாசி எனது நண்பர் அவர் திமுகவில் இணைந்தது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது எஎன டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.