- Home
- Tamil Nadu News
- அதிமுக கூட்டணியில் அமமுக! க்ரீன் சிக்னல் கொடுத்த இபிஎஸ்! குஷியில் டிடிவி தினகரன்!
அதிமுக கூட்டணியில் அமமுக! க்ரீன் சிக்னல் கொடுத்த இபிஎஸ்! குஷியில் டிடிவி தினகரன்!
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பழனிசாமி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதிமுக கூட்டணியில் அமமுக இணையுமா என்ற கேள்விக்கு, "காலம் பதில் சொல்லும்" என பரபரப்பூட்டும் பதிலை அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவை தலைமை ஏற்றி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி சந்தித்த அனைத்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வருகிறார். அதாவது சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் தொண்டர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகின்றனர். ஆகையால் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார்.
விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் இபிஎஸ் பல்வேறு வியூகங்கை வகுத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைக்கப்படும் என அடித்து கூறிவருகிறார். இதற்காகவே இனி பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என கூறி வந்த இபிஎஸ் திமுகவை வீழ்த்தவே பாஜகவுடன் இணைந்துள்ளார். எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி இணைய போகிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறிய கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திமுகவை எதிர்க்கும் ஒற்றை கருத்துடைய கட்சிகள் கூட்டணியில் இணையலாம் என விஜய்க்கும், நாம் தமிழர் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நேரடி அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் முதல்முறையாக அமமுக குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
அதிமுகவில் அமமுக
பிரபல தனியார் தொலைக்காட்சி எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில்: அதிமுக தேர்தல் கூட்டணியில் அமமுக இணையுமா? என நெறியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, காலம் பதில் சொல்லும் என்றார். நெறியாளர் மீண்டும் உங்களுக்கு அதில் ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா? என்று கேட்க, எடப்பாடி பழனிசாமி மீண்டும், காலம் பதில் சொல்லும் என்று சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். மேலும் ஓபிஎஸ் அணியினர் காலில் விழுகிறோம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்களே. ஓபிஎஸ்ஸை சேர்த்துக் கொள்வீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இபிஎஸ், ஓபிஎஸ் விவகாரத்தில் காலம் கடந்துவிட்டது என்று ஒரே வரியில் பதில் அளித்தார்.
குஷியில் டிடிவி தினகரன்
கடந்த காலங்களில் டிடிவி தினகரனை கடுமையாக எதிர்த்து வந்த எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுக கூட்டணியில் அமமுக இல்லை என்று சொல்லாமல் காலம் பதில் சொல்லும் என்று கூறியுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் தோல்வி அடைந்ததற்கு அமமுக தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

