- Home
- Tamil Nadu News
- Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Congress Vs DMK: உதயநிதி தலைமையில்! திமுகவின் அகந்தை ரவுடித்தனம்.. கொதிக்கும் மாணிக்கம் தாகூர்.. நடந்தது என்ன?
Manickam Tagore: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது திமுக ஆதரவாளர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அரசியல் பழிவாங்கல். உதயநிதி தலைமையில் திமுகவில் வன்முறை கலாச்சாரம் வளர்ந்து வருகிறது.

திமுக ஆதரவாளர்கள் கொடூர தாக்குதல்
நாடாளுமன்றம், உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து சந்தித்து வந்த காங்கிரஸ் கட்சி அக்கூட்டணியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தது. இந்நிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இருவரையும் மாறி மாறி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜை நேற்று இரவு திமுக ஆதரவாளர்கள் கொடூரமாகத் தாக்கி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு உதயநிதியின் தலைமையில், வன்முறையும் மிரட்டலும் திமுகவின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன என மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ ரிக்ஷா சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை குறித்து திமுக மாவட்ட செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளை கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டதற்கான அரசியல் பழிவாங்கலாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டவும் தாக்கவும் முயற்சி
அமைதியான போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. கருத்து வேறுபாட்டுக்கு வன்முறையால் பதிலளிப்பது, மக்கள் தேர்தலில் நிராகரித்த பிறகு பொறுமையை இழந்து வரும் ஒரு கட்சியின் அகந்தையையும் சகிப்புத்தன்மையின்மையையும் வெளிப்படுத்துகிறது. அரசியல் ரீதியாக பதிலளிக்காமல், அமலாக்கத்துறை விசாரணைகளை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன் தற்போது காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டவும் தாக்கவும் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தற்போது மிரட்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு
தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் தலைவர் சஹாயராஜ் உடனடியாக இந்த விவகாரத்தை நகர காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். காங்கிரஸ் நிர்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவர்களுக்கு எதிராக கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தூத்துக்குடியில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
திமுகவின் அகந்தை ரவுடித்தனம்
திமுகவின் அகந்தையும் ரவுடித்தனமும் ஜனநாயக ரீதியாக தோற்கடிக்கப்பட வேண்டும். உதயநிதியின் தலைமையில், வன்முறையும் மிரட்டலும் திமுகவின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. காங்கிரஸ் அமைதியாக இருக்காது. இந்த கோழைத்தனமான அரசியலை எதிர்த்து ஒன்றுபட்டு போராடுவோம்; இந்த வன்முறை சக்திக்கு எதிராக உறுதியாக நிற்போம் என தெரிவித்துள்ளார்.

