Tamilnadu Government: தமிழக அரசு 29 எம்.ஆர்.ஐ இயந்திரங்களைக் கொள்முதல் செய்யவுள்ள டெண்டரில் பெரும் நிதி முரண்பாடுகள் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உள்நாட்டில் குறைந்த விலையில் கிடைக்கும் 'மேக் இன் இந்தியா' இயந்திரங்களைப் புறக்கணித்து, அதிக விலைக்கு வெளிநாட்டு இயந்திரங்களை வாங்குவதால் அரசுக்கு ரூ.100 கோடி வரை இழப்பு ஏற்படலாம்.
தமிழ்நாட்டில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, மாநிலத்தின் கடுமையான நிதிச்சுமையைக் குறைப்பதற்காகப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்காக 29 புதிய எம்.ஆர்.ஐ (MRI) இயந்திரங்களைக் கொள்முதல் செய்யத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் டெண்டர் கோரியுள்ளது. ஆனால், இந்த டெண்டர் நடைமுறையில் பெரும் நிதி முரண்பாடுகள் இருப்பதாகத் தற்போது புகார்கள் எழுந்துள்ளன.
உள்நாட்டு இயந்திரங்களை விடுத்து அதிக விலைக்கு டெண்டரா?
டெண்டரில் சமர்ப்பிக்கப்பட்ட நிறுவனங்களின் அறிக்கைகளை ஆய்வு செய்த மருத்துவ நிபுணர்கள், கொள்முதல் விலையில் பெரும் குளறுபடிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒரு எம்.ஆர்.ஐ இயந்திரத்திற்கு சுமார் ரூ.7 கோடி முதல் ரூ.15 கோடி வரை செலவிடத் தமிழக அரசு தயாராக உள்ளது. மத்திய அரசின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், CDSCO அங்கீகாரத்துடன் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் '1.5T MRI' இயந்திரங்கள் வெறும் 5 கோடி ரூபாய் அல்லது அதற்கும் குறைவான விலையிலேயே வணிகரீதியாகக் கிடைக்கின்றன. அரசு அதிக நிதி ஒதுக்க முன்வந்தாலும், டெண்டர் பட்டியலில் உள்ள இயந்திரங்கள் தொழில்நுட்ப ரீதியாகத் தரம் குறைந்தவையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு தவிர்ப்பு
அதிக விலையுள்ள வெளிநாட்டு இயந்திரங்களைத் தவிர்த்து, 'மேக் இன் இந்தியா' தயாரிப்புகளைத் தேர்ந்தெடுத்தால், தவெக அரசுக்கு ஏற்படவிருக்கும் ரூ.75 கோடி முதல் ரூ.100 கோடி வரையிலான மிகப்பெரிய வருவாய் இழப்பைத் தடுக்க முடியும்.
இந்த எம்.ஆர்.ஐ கொள்முதல் டெண்டரில் துளியும் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டும் வலுவாக எழுந்துள்ளது. ஒப்பந்தத்தில் இயந்திரங்களை விற்பனை செய்யும் விநியோகஸ்தரின் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளதே தவிர, கொள்முதல் செய்யப்படும் இயந்திரங்களின் தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு அத்தியாவசியத் தகவல்களும் இல்லை. இத்தகைய ரகசியப் போக்கு, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் நோயாளிகளின் மருத்துவத் தரவுகள் திருடப்படும் தரவு இறையாண்மை சார்ந்த கவலைகளை உருவாக்குவதாகத் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இதுபோன்ற மருத்துவ உபகரணங்களுக்கான டெண்டரில் மேக் இன் இந்தியாவின் கீழ் வரும் உற்பத்தியாளர்களை புறக்கணிப்பது இது முதல்முறையல்ல. முன்னதாக சி.டி.ஸ்கேனர் உற்பத்தியாளர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், அதுதொடர்பான டெண்டருக்கு 2026 ஜூன் 30 வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது.
அதேசமயம் மேக் இன் இந்தியா திட்டம் கீழ் செயல்படும் உற்பத்தியாளர்கள் மாநில அரசின் அனைத்து விதமான டெண்டரிலும் பங்கேற்கலாம் என்பது விதிமுறையாக உள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுக்கு முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விதிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சி.டி.ஸ்கேனர் விவகாரத்தில் இந்த விதிமுறை பின்பற்றப்பட்டாதது தான் அந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. தற்போது MRI டெண்டர் விவகாரத்திலும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் இதுபோன்று செயல்படுவது தவெக அரசின் நிர்வாகத் திறமைக்கு சவாலாகவும், அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய சர்ச்சையாகவும் வெடித்துள்ளது.


