- Home
- Tamil Nadu News
- பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்! 11 இடங்களில் சதம் அடித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!
பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மீண்டும் சுட்டெரிக்கும் வெயில்! 11 இடங்களில் சதம் அடித்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் மே மாத தொடக்கத்தில் மழை பெய்த போதிலும், பள்ளிகள் திறக்கும் நேரத்தில் வெயில் மீண்டும் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.

சுட்டெரித்த வெயில்
தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் கோடை மற்றும் கத்திரி வெயில் எப்படி இருக்குமோ என பொதுமக்கள் பீதி அடைந்தனர். கோடை வெயில் தொடங்கியது முதலே பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் வெயில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வந்தனர். மேலும் சுகாதாரத்துறையும் கர்ப்பிணி மற்றும் வயதானவர்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர்.
கத்திரி வெயில் பரவலாக மழை
இந்நிலையில் மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கியது முதலே தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவி வந்தது. இதனிடையே தென்மேற்கு பருவமழையும் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கேரளாவை ஓட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
11 இடங்களில் வெயில் சதம்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளிர்ச்சியான சூழல் நிலவி வந்த நிலையில் பள்ளி திறக்கும் நேரத்தில் நேற்று முதல் வெயில் சுட்டெரித்து வருவது குழந்தைகளின் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.
பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மீண்டும் வெயில்
அதாவது மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.02 டிகிரி, மதுரை நகரத்தில் 102.56 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், கடலூர், ஈரோடு, பரங்கிப்பேட்டை, புதுச்சேரியில் 101 டிகிரி, திருச்சி, திருத்தணி மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கும் நிலையில் இன்றும் வெயில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரிக்கும் என கூறப்படுகிறது.
மிதமான மழைக்கு வாய்ப்பு
இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றம் காரைக்கால் பகுதிகளிலும் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.