- Home
- Tamil Nadu News
- யாரும் தப்பிக்கவே முடியாது! அடித்து துவைப்பேன்! பிறந்த மண்ணில் இருந்து சொல்கிறேன்! சீமான் ஆவேசம்!
யாரும் தப்பிக்கவே முடியாது! அடித்து துவைப்பேன்! பிறந்த மண்ணில் இருந்து சொல்கிறேன்! சீமான் ஆவேசம்!
மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக சீமான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நிகிதாவின் மோசடி பின்னணி, காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்பிய சீமான், உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

சீமான்
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் தனியார் காவலாளி நகை திருடியதாக திருப்புவனம் தனிப்படை போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் சீமானின் தாயார் மூலம் ஐந்து லட்சம் ரூபாய் அஜித்குமார் குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
ஒரு வழக்கில்கூட நிகிதா தண்டிக்கப்படவில்லை
இதனையடுத்து அஜித்குமார் தனிப்படை காவலர்கள் தாக்கி உயிரிழந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் திருப்புவனம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான்: அஜித்குமார் படுகொலையில் பல நூறு கேள்விகள் எழுகிறது. அதை ஆட்சியாளர்களிடம் எழுப்ப வேண்டிய கடமை உள்ளது. குற்ற வழக்கை கொடுக்க வந்த ஒருவர் தன் முகத்தை மறைத்து பேசியது பேசியதை பார்த்திருக்கிறீர்களா? தன் நகை திருடியது குறித்த பேசிய நிகிதா ஏன் முகத்தை மறைக்க வேண்டும். நிகிதா என தெரியவந்த பிறகு பலர் அவர் மீது மோசடி குறித்து புகார் அளித்துள்ளனர். ஒரு இயக்கத்தை நடத்தி வரும் திருமாறனைக்கூட ஏமாற்றி 10 லட்சம் வாங்கித்தான் விட்டுள்ளார். ஒரு வழக்கில்கூட நிகிதா தண்டிக்கப்படவில்லை. இவ்வளவு பேரையும் நிகிதா ஏமாற்றி எப்படி வெளியே இருந்துள்ளார். காவல்துறை அவரை வெளியே சுதந்திரமாக விட்டுள்ளது. காவல்துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
சித்திரவதை செய்யச் சொல்லி உத்தரவிட்டது யார்?
அஜித்குமார் இறந்த பிறகு நிதிதா புகார் அளித்துள்ளார். அதன்படி எப்ஐஆர் போட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட காவல்துறையை தான் முதல்வர் கையில் வைத்துள்ளார். யார் யாருக்கு உத்தரவிட்டது? யார் முதல் குற்றவாளி என தெரிய வேண்டும்? யார் அடித்து விசாரிக்க சொன்னது? அந்த அதிகாரி யார் என தெரிய வேண்டும்? சீருடை அணியாத காவலர்களை விசாரிக்க சொல்லி உத்தரவிட்டது எஸ்.பி.யா, டிஎஸ்பியா எந்த அதிகாரி? நிகிதா குறித்து இவ்வளவு பேர் புகார் கொடுத்த நிலையில் ஏன் இதுவரை காவல்துறை கைது செய்யவில்லை. சித்திரவதை செய்யச் சொல்லி உத்தரவிட்ட உண்மையான குற்றவாளியை ஏன் காப்பாற்ற துடிக்கிறார்கள் என அடுக்கடுக்கான கேள்விகளை சீமான் எழுப்பியுள்ளார்.
காவல்துறையை நம்பாமல் சிபிஐக்கு வழக்கு மாற்றம்
மேலும் சிபிஐயால் எந்த வழக்கில் நியாயம் கிடைத்திருக்கிறது? சிபிஐக்கு மாற்றி தன் காவல்துறை தோற்றதாக எண்ணி முதல்வர் பதவி விலக வேண்டும். முதல்வர் அவர் கையில் வைத்துள்ள காவல்துறையை நம்பாமல் சிபிஐக்கு வழக்கை மாற்றி உள்ளார். நிகிதா பேசிய உயரதிகாரியும் அந்த உயரதிகாரி காவலர்களுக்கு உத்தரவிட்ட நிலையில் அந்த அதிகாரிதான் உண்மையான குற்றவாளி. எடப்பாடி, ஸ்டாலின் ஆட்சியில் யார் வேண்டுமானாலும் தப்பிக்கலாம். என் ஆட்சியில் ஒருநாள்கூட யாரும் தப்பிக்க முடியாது. நான் அஜித்குமார் சம்பவத்தை மறக்க மாட்டேன். ஒருநாள் நிச்சயமாக தவறு செய்தவர்களை அடித்துத் துவைப்பேன். இதை பிறந்த மண்ணில் நின்று சொல்கிறேன்.
அஜித்குமார் வீட்டிற்கு உதயநிதி, கனிமொழி ஏன் வரவில்லை
திமுக ஆட்சியில் 25க்கும் மேற்பட்ட காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சியில் காவல் மரணம் அடைந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இல்லத்திற்கு சென்று கனிமொழியும், உதயநிதி ஸ்டாலினும் ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார்கள். இப்போது அஜித்குமார் வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலினும், கனிமொழியும் ஏன் வரவில்லை. காரணம் அப்போது எதிர்க்கட்சி இப்போது ஆளுங்கட்சி என சீமான் ஆவேசமாக பேசியுள்ளார்.