ரொம்ப அசிங்கமா இருக்கு! கோர்ட்டில் கதறிய மிளகாய் பொடி வெங்கடேசன்! நடந்தது என்ன?
மிளகாய்ப்பொடி வெங்கடேசன் என்றழைக்கப்படும் கே.ஆர்.வெங்கடேஷ், தனது அடைமொழியை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூர் பி.டி.மூர்த்தி நகர் வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ் என்ற மிளகாய்ப்பொடி வெங்கடேசன். தமிழக பாஜகவில் மாநில ஓபிசி அணியின் மாநில செயலாளராக இருந்து வந்தார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணமோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல முறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி மதுரை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேஷ் பொன்னாடை போர்த்தி வரவேற்ற புகைப்படங்கள் வைரலானது. மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து எடுத்துக்கொண்ட போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு ஆந்திர காவல்துறை, தமிழக காவல்துறை, தெலங்கானா காவல்துறை என பலருக்கு டேக் செய்திருந்தார்.
இந்நிலையில் எலட்ரிக்கல்ஸ் கடைக்கு வாங்கிய பொருட்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கலில் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், செங்குன்றம் போலீசாரால் மிளகாய் பொடி வெங்கடேசன் கடந்த ஜூன் மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் மிளகாய்ப்பொடி என்ற அடைமொழியை நீக்க புழல் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி ரவுடி வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சந்தன மரம் கடத்திய போது உங்கள் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படவில்லையா? என நீதிபதி கேள்வி எழுப்பியது. மேலும் ரவுடி வெங்கடேசனின் கோரிக்கைக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.