பாமக நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை.! சரவெடியாக சீறிய ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சிப் பதவிகள் மற்றும் அதிகாரம் தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ளது. இருவரும் ஒருவரையொருவர் கட்சியிலிருந்து நீக்கி வருவதோடு, கட்சி இரண்டாகப் பிளவுபடும் சூழல் உருவாகியுள்ளது.

அதிகார போட்டியில் தந்தை- மகன் மோதல்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் திரைமறைவில் நடைபெற்று வந்த மோதல் நிர்வாகிகள் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. புதுச்சேரியில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் தான், ராமதாஸ் தனது மகள் வழி பேரனான முகுந்தன் பரசுராமனை இளைஞரணி தலைவராக நியமித்தார்.
இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முகுந்தனுக்கு கட்சி அனுபவம் இல்லை எனவும், இந்த நியமனம் ஏற்க முடியாது எனவும் அனைவர் முன்னிலையிலும் கூறினார். இதனால் மேடையிலேயே இருவருக்கும் காரசார வாக்குவாதம் ஏற்பட்டு, தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது.
ராமதாஸ்- அன்புமணி மோதல்
அப்போது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "நான் உருவாக்கிய கட்சி, நான் சொல்வதுதான் நடக்கும்" என்று கூறி, உடன்படாதவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம் எனத் ஆவேசமாக அறிவித்தார். இதற்கு உடனடியாக மேடையிலேயே பதில் அளிக்கும் வகையில் மைக்கை பிடித்த அன்புமணி, சென்னை பனையூரில் தனது அலுவலகத்துக்கு வரலாம் எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே மோதலையடுத்து சமாதானப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. அப்போது சிறிய அளவில் சமாதானம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் திடீரென செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,
தன்னை பாமகவின் தலைவராக அறிவித்தார், அதேநேரம் அன்புமணியை செயல் தலைவராக செயல்படுவார் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, தான் முறைப்படி பொதுக்குழுவால் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என பதிலடி கொடுத்தார். இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதால்ல பாமக இரண்டாக பிளவு பட்டது.
சுற்றுப்பயணத்தை தொடங்கும் ராமதாஸ்
ராமதாஸ் ஆதரவாளர்கள் ஒரு பக்கமும் அன்புமணி ஆதரவாளர்கள் ஒரு பக்கம் என தனி அணியாக நின்றனர். இதனால் அன்புமணிக்கு ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் மாறி மாறி பதவி மற்றும் கட்சியில் இருந்து நீக்கி வருகின்றனர். ஒரு கட்டத்தில் ராமதாஸ் வயது முதிர்வால் "குழந்தைபோல்" மாறிவிட்டதாகவும், சிலர் அவரை சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதாகவும் அன்புமணி குற்றம்சாட்டினார்.
அன்புமணியின் குற்றச்சாட்டுகளை மறுக்கும் வகையில், ராமதாஸ் தனது உடல் திறனையும், கட்சி பணியாற்றும் திறனையும் நிரூபிக்க, ஜூலை 10, 2025 அன்று கும்பகோணத்தில் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த மோதலால் ராமதாஸ் ஆதரவாளராக இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணி அறிவிப்பு வெளியிட்டார்.
நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை
ஆனால் அன்புமணிக்கு நிர்வாகிகளை நீக்க அதிகாரம் இல்லையென சரவெடியாக வெடித்துள்ளார். எம்.எல்.ஏ. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லையெனவும் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என திட்டவட்டம் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், பாமகவில் நிர்வாகிகளை நீக்க எனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. பா.ம.க. கொறடாவாக அருள் உள்ளார். ஜி.கே.மணி மூலம் கடிதம் கொடுத்த பிறகுதான் நீக்க முடியும். எனது மனம் வேதனைப்படும் அளவுக்கு செய்திகள் வருகின்றன.
எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நான் நடத்தி வருகிறேன் என ராமதாஸ் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், திமுக- அதிமுகவுடன் கூட்டணி பேசி வருவதாக வரும் தகவல்கள் அனைத்தும் வதந்தி தான். பாமக செயற்குழு பொதுக்குழு கூடி தேர்தல் கூட்டணி தொடர்பாக முடிவு செய்யும் என அறிவித்தார்.