அன்புமணிக்கு போட்டியாக மகளை களத்தில் இறக்கிய ராமதாஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
Anbumani vs Kanthimathi : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணிக்கு எதிராக மகள் காந்திமதியை கட்சியின் செயல் தலைவராக நியமித்துள்ளார். இதனால், தந்தை-மகன் இடையே இருந்த அதிகாரப் போட்டி தற்போது அக்கா-தம்பி மோதலாக உருவெடுத்துள்ளது.

பாமகவில் நாளுக்கு நாள் தந்தை- மகன் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கினார், ஆனால் தான் தான் பாமகவின் தலைவர் எனவும், பொதுக்குழு மற்றும் தேர்தல் ஆணையத்தால் தான் தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனவே தன்னை நீக்க அதிகாரம் பொதுக்குழுவை தவிர வேறு யாருக்கும் இல்லையென தெரிவித்தார். ஆனால் ராமதாஸ் விடாப்படியாக அன்புமணி புதிதாக கட்சியை தொடங்கி கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பாமகவில் அன்புமணிக்கு போட்டியாக தனது மூத்த மகள் காந்திமதியை கொண்டு வர ராமதாஸ் திட்டமிட்டார். இதற்காக ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் காந்திமதியை மேடையேற்றியிருந்தார். அடுத்தாக பாமக மகளிர் மாநாட்டிலும் காந்திமதிக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் பாமகவில் செயல் தலைவர் பதவியை தனது மகள் காந்திமதிக்கு ராமதாஸ் வழங்கியுள்ளார். தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமதாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியின் மூத்த மகள்தான் காந்திமதி. இவருக்கு அடுத்து கவிதா என்பவரும் அன்புமணியும் உள்ளனர். காந்திமதிக்கு சுகந்தன், பிரதீபன் மற்றும் முகுந்தன் என்று மூன்று மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனைத்தான் அன்புமணியின் மூத்த மகள் சங்கமித்ராவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
எனவே அக்கா, தம்பி என்று உறவைத் தாண்டி, சம்பந்திகளாகவும் அன்புமணியும், காந்திமதியும் இருக்கின்றனர். அக்காவின் கடைசி மகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அன்புமணிக்கு தற்போது தனது மூத்த அக்காவை பாமகவின் செயல் தலைவராக ராமதாஸ் அறிவித்திருப்பது அன்புமணிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதுவரை ராமதாஸ், அன்புமணி இடையே வெடித்து வந்த அதிகார மோதல் தற்போது அக்கா, தம்பிக்கிடையே நடக்கப்போகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாமகவில் கட்சி மோதலை தாண்டி, குடும்பத்திற்குள் மோதல் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த மோதலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது மேலும் விரிசல் அதிகரிக்குமா? என பாமக தொண்டர்கள் கலக்கத்தோடு காத்துள்ளனர்.