தனது தந்தைக்காக களமிறங்கி இருக்கும் காந்திமதிக்கு பசுமை தாயகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தந்தையும், மகனும் மாறி மாறி கூட்டங்கள் நடத்துவது, அறிக்கை விடுவது என தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது பாமக தொண்டர்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கட்சியில் தனக்கு பிறகு தனது மகன் என்ற நிலையில் இருந்து தனது மகள் என்ற நிலைக்கு ராமதாஸ் நிலைப்பாடு மாறி இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ராமதாஸ், அன்புமணி இடையே எழுந்துள்ள மோதல் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே செல்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் இந்த மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கவலையில் பாட்டாளி மக்கள் கட்சி சொந்தங்கள் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக இளைஞர் சங்க தலைவராக தனது பேரன் முகுந்தனை அறிவித்தார் ராமதாஸ். மேடையிலேயே இதனை வெளிப்படையாக, கடுமையாக எதிர்த்தார் அன்புமணி. அப்போது பற்றி எரியத் தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவேயில்லை. கடந்த சில மாதங்களாக தினம்தோறும் ஊடகங்கள் முன்பு அன்புமணியை விளாசி வருகிறார் ராமதாஸ்.

கட்சியில் இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நீக்கியும், நியமித்தும் அறிவிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காந்திமதி கலந்து கொண்டார். அவர் முதலில் நிர்வாகிகளுடன் அமர வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென அழைக்கப்பட்டு மேடையில் இரண்டாவது வரிசையில் அமர வைக்கப்பட்டார். இது பெரும் கவனத்தை ஈர்த்தது. மேலும் இந்தக்கூட்டத்தில் பாமக நிறுவனருக்கு கலங்கத்தை உருவாக்குபவர்கள் மீதும், தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்துவோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது இவர்களுக்கு இடையே விரிசலை மேலும் அதிகரித்தது.

இதனைஅடுத்து ராமதாஸின் எதிர்ப்பை மீறி நடை பயணத்தை தொடர்ந்த அன்புமணி பொதுக்குழு கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தினார். அதேபோல அன்புமணிக்கு போட்டியாக பூம்புகாரில் மகளிர் மாநாட்டை நடத்தி காண்பித்திருக்கிறார் ராமதாஸ். இந்த மகளிர் மாநாட்டில் தனது மூத்த மகள் காந்திமதியை மீண்டும் மேடையேற்றி இருப்பது பேசு பொருளாக மாறியது. மூத்த மகளை முன்னிலைப்படுத்துவது குறித்து ராமதாஸிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. கட்சியில் ராமதாஸிற்கு பிறகு அன்புமணி என்று கூறப்பட்டு வந்த நிலையில் தன்னோடும் மோதி வரும் மகனுக்கு செக் வைக்கும் விதமாக காய் நகர்த்தி வருகிறார் ராமதாஸ் .

ராமதாஸ்- சரஸ்வதி தம்பதியின் மூத்த மகள்தான் காந்திமதி. இவருக்கு அடுத்து கவிதா என்பவரும் அன்புமணியும் உள்ளனர். காந்திமதிக்கு சுகந்தன், பிரதீபன் மற்றும் முகுந்தன் என்று மூன்று மகன்கள் உள்ளனர். இவரது இரண்டாவது மகனைத்தான் அன்புமணியின் மூத்த மகள் சங்கமித்ராவுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். எனவே அக்கா, தம்பி என்று உறவைத் தாண்டி, சம்பந்திகளாகவும் அன்புமணியும், காந்திமதியும் இருக்கின்றனர். அக்காவின் கடைசி மகன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அன்புமணிக்கு தற்போது தனது மூத்த அக்காவை கட்சியின் முன்னிலைப்படுத்துவது அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்த நிலையில் தனது தந்தைக்காக களமிறங்கி இருக்கும் காந்திமதிக்கு பசுமை தாயகத்தில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இதுவரை ராமதாஸ், அன்புமணி இடையே வெடித்து வந்த அதிகார மோதல் தற்போது அக்கா, தம்பிக்கிடையே நடக்கப்போகிறதா? என்ற சந்தேகமும் எழத் தொடங்கியுள்ளது. இப்படி இரு தரப்பிலும் தினமும் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த மோதலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது மேலும் விரிசல் அதிகரிக்குமா? என தவிப்போடு காத்திருக்கிறார்கள் பாமக தொண்டர்கள்.