- Home
- Tamil Nadu News
- Teacher Protest : பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.! களத்தில் இறங்கிய தட்டச்சு ஆசிரியர்கள்
Teacher Protest : பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்.! களத்தில் இறங்கிய தட்டச்சு ஆசிரியர்கள்
தமிழகத்தில் 2027 முதல் தட்டச்சுத் தேர்வுகள் கணினி மூலம் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு, 5,000 தட்டச்சுப் பள்ளிகள் மற்றும் 5 இலட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தட்டச்சு பள்ளி ஆசிரியர்கள்
தட்டச்சுத் தேர்வுகள் பல ஆண்டுகாலத்திற்கும் மேலாக தட்டச்சுப் பொறியின் வாயிலாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பள்ளிக் கல்வித் துறைதான் தட்டச்சு-சுருக்கெழுத்துத் தேர்வுகளை தொடர்ந்து நடத்தி வந்தது. இதனையடுத்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தட்டச்சு-சுருக்கெழுத்துத் தேர்வுகளை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் சுமார் 5,000 தட்டச்சுப் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 4,000 தட்டச்சுப் பள்ளிகளில் கணினி (COA தேர்வுக்காக) வகுப்புகளும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் அறிவுறுத்தலால் நடைபெற்று வருகின்றன.
வேலை இழக்கும் தட்டச்சு ஆசிரியர்கள்
இந்த நிலையில் தமிழகத்தில் இன்னும் சில தேர்வுகளுக்கு மட்டும் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் நடைபெறும் தட்டச்சுத் தேர்வுகள் தட்டச்சு இயந்திரங்கள் மூலம் நடைபெறும் எனவும், 2027-ஆம் ஆண்டு முதல் கணினி பயன்பாட்டில் மட்டுமே நடத்தப்படும் என்கிற அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்திலுள்ள தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற சுமார் 5,000 தட்டச்சுப் பள்ளிகளையும், 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
தட்டச்சுக்கு பதில் கணினியில் தேர்வு
தமிழகத்தில் உள்ள சுமார் 5,000 தட்டச்சுப் பள்ளிகளில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தட்டச்சுப் பொறிகளும், 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட கணினிகளும் உள்ளன. தமிழக அரசின் இந்த முடிவால் அனைவரும் நடுத் தெருவிற்குத் தள்ளப்பட உள்ளனர். இதனையடுத்து சென்னையில் வணிகவியல் பள்ளியல் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.
மாநில தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். தட்டச்சுத் தேர்வினை சுமார் 5,000 அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகளின் 2 இலட்சம் தட்டச்சு இயந்திரங்கள் மூலமாக மட்டுமே தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எப்பொழுதும் போல் நடத்திட வேண்டும். தனியாரை ஊக்குவிக்க முயற்சிக்க வேண்டாம்.
சென்னையில் களத்தில் இறங்கிய தட்டச்சு ஆசிரியர்கள்
தட்டச்சுப் பள்ளிகள் எங்கிற வார்த்தையையே நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சுப் பள்ளிகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி COA (கம்ப்யூட்டர் ஆன் ஆபீஸ் ஆட்டோமேஷன்) கணினித் தேர்வினை நடத்திடவும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை/முதுநிலை தேர்ச்சி பெற்றவர்களையே COA தேர்விற்கு அனுமதிக்க வேண்டும் எனவும், புதிய தேர்வு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.