மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த செய்தி.! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு
சென்னையில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு 18 அரசு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தங்கும் மாணவர்களுக்கு மூன்று வேளை உணவு, தங்குமிடம், ஜமக்காளம், போர்வைகள் இலவசமாக வழங்கப்படும்.

உயர்கல்வியில் சேர தயாராகும் மாணவர்கள்
கல்விக்காக பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. அந்த வகையில் கோடை விடுமுறை முடிவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதே போல 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நிலையில் மாணவர்கள் உயர்கல்வியில் சேர தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் ஐடிஐ, பாலிடெக்னிக், கல்லூரிகளில் சேர்ந்து வருகிறார்கள். வீட்டிலிருந்து பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மாணவர்கள் வந்து செல்ல சிரமப்படும் நிலையில் மாணவர்களுக்கு 3 வேளை உணவு, இருக்க இருப்பிடம், ஜமக்காளம், போர்வைகள் உள்ளிட்டவைகள் அரசு விடுதிகளில் வழங்கப்படவுள்ளது. எனவே இந்த விடுதிகளில் சேர மாணவர்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மாணவர்களுக்கு இலவச தங்கும் விடுதி
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாடு அரசால் சென்னை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர் மற்றும் மாணவியர்களுக்கென 12 அரசு கல்லூரி மாணவர் விடுதி மற்றும் 6 அரசு கல்லூரி மாணவியர் விடுதிகள் ஆக மொத்தம் 18 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
3 வேளை உணவு- போர்வை இலவசம்
இவ்விடுதிகளில், எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ/மாணவியருக்கு மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதியும் அளிக்கப்படும். கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ/மாணவியருக்கு ஜமக்காளம் வழங்கப்படும். விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைத்து மாணவ/மாணவயிர்களுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை போர்வைகள் வழங்கப்படும்.
விடுதியில் சேர விதிமுறைகள் என்ன.?
இவ்விடுதிகளில் சேர்வதற்கு, பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ. 2,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ-க்கு மேல் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ/மாணவியர் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்படோர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
விடுதியில் விண்ணப்பங்கள் சமர்பிக்க வேண்டிய நாள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்/காப்பாளினிகள் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் 15.07.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத் தேவையில்லை.
விடுதியில் சேரும்போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.