சர்வாதிகாரி எடப்பாடி..! கட்சி சீனியரை பேச்சுக்கு கூட பேச அழைக்காத ஆணவம்
அதிமுக.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதற்கு முன்பாக இது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் பெயரளவுக்கு கூட ஆலோசனை மேற்கொள்ளாத எடப்பாடியின் செயல் பல மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வரான எடப்பாடி பழனிசாமி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் திண்ணையில் படுத்திருந்தவனுக்கு திடுக்கென நிலைத்ததாம் கல்யாணம் என்பது போல் திடீரென முதலமைச்சர் ஆக்கப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காய் நகர்த்தல்கள் இருந்தாலும் அப்போதைய ஆளுநர் மூலம் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இதனை புரிந்துகொண்ட அதிமுக மூத்த தலைவர்கள் சசிகலா தலைமையில் கூவத்தூர் பங்களாவில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
பங்களாவில் நடைபெற்ற அதிரடி பேச்சுவார்த்தையில் அடுத்த முதல்வராக செங்கோட்டையனை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. மேலும் முதல்வராக தேர்வு செய்யப்படும் நபர் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் தலா ரூ.3 கோடி பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. நான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆனால் பணத்தை உடனடியாக பட்டுவாடா செய்ய முடியாது 10 முதல் 15 தினங்கள் அவகாசம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை. எதிர்க்கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் விரைந்து பணத்தை பட்டுவாடா செய்ய வேண்டும் என்ற நிலை எழுந்தது.
வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட எடப்பாடி
அப்போது செங்கோட்டையனுக்கு அடுத்த பொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமியோ, நீங்கள் உத்தரவிட்டால் இன்றைய தினமே நான் பணத்தை கொடுக்கிறேன் என முன்மொழிய அதன் அடிப்படையிலேயே பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பன்னீர்செல்வத்தை போன்று பழனிசாமி அதிர்ஷ்டத்தால் முதல்வரானாலும், தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். அதிமுக.வில் அப்போது அதிகாரத்தில் இருந்த சசிகலா, டிடிவி தினகரன் என அவர்களக்கு ஆதரவாக இருந்த ஒவ்வொருவரையும் கட்சியில் இருந்து வெளியேற்றி இனி அதிமுக என்றால் நான் தான் என்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டார்.
சீனியர் Vs ஜூனியர்
தற்போது பொச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி கட்சியின் அடிப்படை உறுப்பினராவதற்கு முன்பாகவே செங்கோட்டையன் அதிமுக.வில் முக்கியப் பொறுப்புகளை அலங்கறித்தவர். முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்களிடமும் நன் மதிப்பை பெற்று இருவரது நிழலாக செயல்பட்டவர். அப்படி இருக்கையில், தனக்கு பின்னால் கட்சிக்குள் வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் எப்படி பணியாற்றுவது என்ற சங்கடம் செங்கோட்டையனுக்கு இருந்தாலும் கட்சியின் நலன் கருதி தனது மனநிலையை மாற்றிக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளார்.
நானே தலைவர் என்ற மனநிலையில் எடப்பாடி பழனிசாமி
பழனிசாமியின் தலைமையை செங்கோட்டையன் ஏற்றுக் கொண்டாலும், அவர் பல மூத்த தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்படவில்லை என்பது செங்கோட்டையனுக்கு நெருடலாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என பல மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கட்சி மிகவும் பலவீனம் அடைந்துள்ளது. இதன் காரணமாகவே பழனிசாமி தலைமையில் அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலாவது அதிமுகவின் தோல்வி முகத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று திட்டமிட்ட செங்கோட்டையன் இனியும் பொறுத்திருக்க முடியாது. அடுத்த 10 தினங்களுக்குள் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைக்கும் பணியை பொதுச்செயலாளர் மேற்கொள்ள வேண்டும். அப்படி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அந்த பணிகளை நான் மேற்கொள்வேன் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். செங்கோட்டையன் விடுத்தது எச்சரிக்கையாகவே இருந்தாலும், அவர் கட்சியின் நலன் கருதியே அப்படி பேசியிருக்கிறார் என்று பல சீனயர் தலைவர்களும் அதனை அக்கறையாகவே சொல்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளுக்கு எதிராக செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் ஒரு இடத்தில் கூட பொதுச்செயலாளரின் பெயரை உச்சரிக்கவில்லை. மேலும் யார் யாரை இணைப்பது என்பதை கூட பொதுச்செயலாளரே முடிவு செய்து கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை கட்சி பலப்பட வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கூறியது செங்கோட்டையனின் நாகரிகத்தை வெளிப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் சிலாகித்துக் கொள்கின்றனர்.
செங்கோட்டையனை தூக்கி எறிந்த எடப்பாடி
இதனிடையே செங்கோட்டையனின் அதிரடி பிரஸ் மீட்டால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் திட்டமிட்டிருந்த சில நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தனி அறையில் ஆழ்ந்த சிந்தனையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே பொதுச்செயலாளருக்கு கெடு விதித்த செங்கோட்டையனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதிமுக.வின் ஹிட்லர் எடப்பாடி பழனிசாமி?
பொதுச்செயலாளரை விடவும் கட்சியில் சீனியர், கட்சியின் அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர், கொங்கு மண்டலத்தில் மிகவும் செல்வாக்குமிக்க தலைவர் என பல வகையிலும் பலம் பொறுந்திய நபராக இருக்கும் செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக கட்சின் மூத்த தலைவர்களிடம் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளாமல் தன்னிச்சையாக செங்கோட்டையனை நீக்கியது பல மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பழனிசாமியின் இந்த நடவடிக்கை அதிமுக.வின் ஹிட்லர் என்று சொல்லும் அளவிற்கு அவரது நடவடிக்கை இருப்பதாக மூத்த தலைவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.