- Home
- Tamil Nadu News
- அடுத்த முதலமைச்சர் யார்? நூல் இழையில் அடித்து தூக்கும் ஸ்டாலின்.. பரபரப்பு ரிப்போர்ட்
அடுத்த முதலமைச்சர் யார்? நூல் இழையில் அடித்து தூக்கும் ஸ்டாலின்.. பரபரப்பு ரிப்போர்ட்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக திமுகவும் அதிமுகவும் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் திமுக, அதிமுகவிற்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும். அடுத்த முதலமைச்சர் யார் என்ற கருத்து கணிப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 9 மாத காலமே உள்ளது. எனவே தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் கட்சிப்பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தொகுதி நிலவரம். உட்கட்சி மோதல், நிர்வாகிகள் மீதான அதிருப்தி, அரசின் திட்டங்கள் தொடர்பாக கள ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் ஒன் டூ ஒன் கூட்டத்தை நடத்தி கள நிலவரத்தை நிர்வாகிகளிடம் நேரடியாக கேட்டறிந்து வருகிறார்.
அடுத்ததாக மக்களை நேரடியாக சந்திக்க களம் இறங்கியும் உள்ளது. ஆளுங்கட்சியான திமுக சார்பாக ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் 2.5 கோடியாக திமுக உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க வீடு வீடாக பிரச்சாரத்தை திமுக தொடங்கியுள்ளது. அப்போது தமிழக அரசின் திட்டங்கள், பாஜக அரசு தமிழகத்திற்கு செய்ய தவறிய திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைத்து வருகிறது.
களத்தில் இறங்கிய அரசியல் தலைவர்கள்
ஆளுங்கட்சியை வீழ்த்த பலம்வாய்ந்த கூட்டணியை அமைக்க அதிமுக காய் நகரத்தி வருகிறது. அந்த வகையில் பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட அதிமுக தமிழக சட்ட மன்ற தேர்தலுக்காக மீண்டும் உறவை புதுப்பித்துக்கொண்டுள்ளது. இதனையடுத்து பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளோடு பேச்சுவார்த்தையையும் தொடங்கியுள்ளது.
அதே நேரம் மக்களை சந்தித்து திமுக ஆட்சியின் செயல்பாடுகள் விமர்சிக்கும் வகையில் தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கியுள்ளார். இதற்காக தொகுதி தொகுதியாக மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தும், திமுக ஆட்சியின் செயல்பாடுகளையும் விமர்சித்து வருகிறார்.
தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு.?
தேர்தலுக்கு சில மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதே தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றப்போவது திமுகவா.? அதிமுகவா.? என்ற விவாதம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை, வேட்பாளர் அறிவிக்கவில்லை, தேர்தல் வாக்குறுதி அளிக்காத நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்றால் யாருக்கு வாய்ப்பு என்ற கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது.
சத்யம் தொலைக்காட்சி நடத்திய தேர்தல் கருத்து கணிப்பில் திமுகவிற்கு 105 தொகுதிகளும், அதிமுகவிற்கு 90 இடங்களும், விஜய் மற்றும் சீமான் ஒரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ளது. மேலும் இழுபறியாக 39 தொகுதிகள் இருப்பதாக கூறியுள்ளது.
அடுத்த முதலமைச்சர் யார்.?
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த முதலமைச்சராக யார் வர வாய்ப்பு என்ற கேள்விக்கு மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் என 39 சதவிகித பேரும் அடுத்தாக எடப்பாடி பழனிசாமிக்கு 36 சதவிகித பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்டாலின் - இபிஎஸ் இடையே இரண்டு சதவிகித வித்தியாசம் மட்டுமே உள்ளது.
அடுத்தாக அரசியல் களத்தில் புதிதாக இறங்கியுள்ள விஜய்க்கு 13 சதவிகித மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 7 சதவிகித மக்கள் முதலமைச்சராக வர ஆதரித்துள்ளதாக சத்யம் தொலைக்காட்சி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.