ஜூன் 15ஆம் தேதிக்கு பின் பள்ளியை திறங்க.! முதலமைச்சருக்கு சென்ற முக்கிய கடிதம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய வெயில்
கோடை வெயிலின் தாக்கம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே உச்சத்தை தொட்டது. இதனால் மக்கள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர். வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் நிலை நீடித்து வந்தது. மேலும் பள்ளி மாணவர்கள் கடும் வெயிலிலும் பள்ளிகளுக்கு சென்று வந்தனர்.
இதனையடுத்து மாணவர்களின் வசதிக்காக முன்கூட்டியே ஆண்டு இறுதி தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. சுமார் 40 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஜூன் 2ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
இருந்த போதும் வெயிலின் தாக்கம் ஜூன் மாதத்தில் அதிகரிக்க கூடும் என்பதால் கூடுதலாக மேலும் ஒரு வாரம் விடுமுறை கிடைக்கும் என மாணவர்கள் காத்திருந்தனர். ஆனால் இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது.
இதனால் கேரளா, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் 2ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யும் படி பள்ளிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு
இந்த சூழ்நிலையில் ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்க வேண்டும் என முதலமைச்சருக்கு எம்எல்ஏ நேரில் சென்று கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை இன்று சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏவும், மனித நேய மக்கள் சேவை இயக்கத்தின் நிறுவனருமான நேரு (எ) குப்புசாமி சந்தித்தார்.
மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
அப்போது பள்ளிகள் திறப்பு தொடர்பாக கோரிக்கை கடிதத்தை வழங்கினார். அதில், கோடைக்காலம் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் தென் மேற்கு பருவமழை காலம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கோடை வெப்பம் சற்று தணிந்துள்ளது
ஜூன் 15 பள்ளிகளை திறக்க கோரிக்கை
அதே நேரம் காற்றழுத்த தாழ்வு நிலை கரையை கடந்துவிட்டால் மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து தற்காலிகமாக நிலவி வந்த குளிர்ந்த மேகமூட்டங்கள் கலைந்துவிடும். எனவே வெப்பத்தால் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். வெப்பத்தின் அளவு 100 டிகிரியை தாண்டக்கூடும். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளி திறப்பை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்து ஜூன் 15-ம் தேதிக்கு பின்னர் திறக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.