மாணவர்களே இதுதான் லாஸ்ட் சான்ஸ்! தேர்வுகள் இயக்ககம் சொன்ன முக்கிய தகவல்!
தமிழ்நாட்டில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

10, 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்கள்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. இதில், தமிழகத்தில் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதிய நிலையில் 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் கடந்த 12ம் தேதி முதல் மாணவ - மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, 11ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, கடந்த 19ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுத் துறை இயக்ககம்
இதுதொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் லதா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும், சில பள்ளிகளின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
இதையடுத்து தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் மாணவர்கள் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி போன்றவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
ஜூன் 13-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்
இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழிலில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அதை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஜூன் 13-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். மாணவர்களின் நலன் கருதி பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.