- Home
- Tamil Nadu News
- 2 லட்சம் ரூபாய் வரை நகை கடன் பெறுபவர்களுக்கு விலக்கு.! இது போதாது- RBIக்கு பறந்த முக்கிய கடிதம்
2 லட்சம் ரூபாய் வரை நகை கடன் பெறுபவர்களுக்கு விலக்கு.! இது போதாது- RBIக்கு பறந்த முக்கிய கடிதம்
ரிசர்வ் வங்கியின் புதிய தங்க நகைக்கடன் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் குறைவான கடன்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து தங்க நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்க கோரிக்கை

நகைக்கடன் பெற புதிய விதிமுறை
ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களும், விவசாயிகளும் வங்கிகளில் தங்களின் தேவைகளுக்காக நகையை அடமானம் வைத்து கடன் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு சமீபத்தில் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அடமானம் வைக்கப்படும் நகை மதிப்பில் 75 விழுக்காடு மட்டுமே கடன் வழங்கப்படும். 22 காரட் அல்லது அதற்கு மேல் தரம் உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் நகையை மீட்பதற்கான முழுத்தொகையையும் வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டும். வட்டியை மட்டும் கட்டி, கடனை புதுப்பித்துக் கொள்ளும் முறை ரத்து என புதிதாக 9 விதிகளை அறிவித்திருந்தது.
2 லட்சம் வரை நகைக்கடனுக்கு விலக்கு
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து புதிய விதிமுறையில் சற்று மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. தங்க நகை கடன் வழங்குவதற்கான அதன் வரைவு வழிமுறைகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள நிதிச் சேவைகள் துறை பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
அதில், 2 லட்சத்திற்கும் குறைவான தங்கக் கடன்களைப் பெறும் கடன் வாங்குபவர்களுக்கு புதிய தேவைகளிலிருந்து விலக்கு அளிக்க DFS முன்மொழிந்துள்ளது. இந்த நடவடிக்கை, சிறிய அளவிலான தங்கக் கடன்களை பெருபவர்களுக்கு பயன் அளிக்கும் என கூறப்படுகிறது. இருந்த போதும் 2 லட்சம் என்பது போதாது என கோரிக்கை எழுந்துள்ளது.
ஆர்பிஐக்கு இபிஎஸ் கோரிக்கை
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை (DFS_India), தங்கக் கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ₹2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
விவசாயிகள் சிறு வியாபாரிகள் பாதிப்பு
இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக் கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடரனும்
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிசீலிப்பதுடன், தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென அதிமுக சார்பில் வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்