இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்க இருப்பை 879.59 டன்களாக உயர்த்தியுள்ளது. இந்தியா தங்கத்தை ஏன் வாங்குகிறது? உலகப் பொருளாதாரத்தில் என்ன நடக்கப்போகிறது?

நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது தங்க இருப்பை 879.59 டன்களாக உயர்த்தியுள்ளதாக மத்திய வங்கியின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2024 இல் நாட்டின் தங்க இருப்பு 854.73 டன்களாக இருந்தது. 2025 நிதியாண்டில் 54.13 டன் புதிய தங்கம் வாங்கப்பட்டது. தங்கத்தின் விலை 30% உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக இருப்பு அதிகரித்துள்ளது. RBI இன் தங்க இருப்பு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு இருப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.சுமார் 511.99 டன் தங்கம் இந்தியாவிலும், 348.62 டன் தங்கம் வெளிநாட்டிலும், முக்கியமாக இங்கிலாந்து வங்கி மற்றும் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கி (BIS) ஆகியவற்றிலும் சேமிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு

கூடுதலாக, 18.98 டன் தங்கம் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டுள்ளது. 2025 நிதியாண்டில், RBI 38.64 டன் தங்கத்தை இந்தியாவிற்குத் திரும்பக் கொண்டு வந்தது. இது தனது வெளிநாட்டு இருப்புகளில் ஒரு பகுதியை மீண்டும் கொண்டு வருவதன் தொடர்ச்சியாகும். இந்த நடவடிக்கை, தனது இருப்புகளின் மீது உள்நாட்டு கட்டுப்பாட்டை அதிகரிக்கும் மத்திய வங்கியின் உத்தியுடன் ஒத்துப்போகிறது.தங்க வைப்புத்தொகையில் ஏற்பட்ட அதிகரிப்பு RBI இன் இருப்புநிலைக் குறிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, இது மார்ச் 31, 2025 நிலவரப்படி 8.2% அதிகரித்து ரூ.76.25 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கு தங்க இருப்புக்கள் கணிசமான பங்களிப்பை அளித்துள்ளன, நிதியாண்டில் தங்க சொத்துக்களின் மதிப்பு 52.09% அதிகரித்துள்ளது.

முதல் இடத்தில் அமெரிக்கா

சர்வதேச அளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாக இருந்தது, 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கி உள்ளனர்.இந்தியா உட்பட உலகின் டாப் 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76% தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1% வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

எவ்வளவு வாங்கியது இந்தியா?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்த தொடங்கி உள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திர கொள்முதல் ஆகும். இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், RBI-யின் தங்க இருப்பு 35% அதிகரித்து, FY20 இல் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது.

சர்வதேச தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது - தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்து. 10 வருடங்களில் 3 இடங்கள் மேலே வந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆகும், இது 2021 இல் 6.86% ஆக இருந்தது.

இதுதான் காரணம்

பொருளாதார சரிவுகளில் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும்.இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதில் தீவிரமாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட தரவுகளின்படி, அதன் தங்கத்தின் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.