- Home
- Tamil Nadu News
- வைகோ.வின் ஆல் இன் ஆல்..! மல்லை சத்யாவை தூக்கி எறிந்த வைகோ: மதிமுக.வில் இருந்து நிரந்தர நீக்கம்
வைகோ.வின் ஆல் இன் ஆல்..! மல்லை சத்யாவை தூக்கி எறிந்த வைகோ: மதிமுக.வில் இருந்து நிரந்தர நீக்கம்
மதிமுக.வின் துணைப்பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்த மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வைகோவின் ஆல் இன் ஆல்
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான மதிமுக.வில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை வைகோவுக்கு அடுத்தது மல்லை சத்யா தான் என்ற நிலை கட்சிக்குள் இருந்து வந்தது. அந்த வகையில் எந்த வகையான போராட்டமாக இருந்தாலும் சரி, மாநாடாக இருந்தாலும் சரி வைகோவின் கட்டளைக்கு இணங்க கச்சிதமாக முடித்து வைகோவின் தளபதியாக திகழ்ந்து வந்தார்.
துரை வைகோவுக்காக மழுங்கடிக்கப்பட்ட மல்லை சத்யா?
இதனிடையே திடீரென அரசியலில் என்ட்ரி கொடுத்த வைகோவின் மகன் துரைவைகோ கட்சிக்குள் கிடுகிடுவென வளர்ச்சி அடைந்தார். வைகோவின் ஆதரவுடன் துரைவைகோவின் கை கட்சிக்குள் வலுக்கத் தொடங்கியது. இதனை பல மூத்த அரசியல் தலைவர்களும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட அதிருப்தி அரசியல் தலைவர்களில் ஒருவராக மல்லை சத்யா மாறினார்.
பல இடங்களில் துரைவைகோவின் செயல்பாடுகளை விமர்சித்து பொதுவெளியில் வெளிப்படையாகவே கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். இதனால் அதிருப்தி அடைந்த வைகோ, மல்லை சத்யாவை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக உத்தரவிட்டார். மேலும் அவர் மீது நிர்வாக ரீதியாக விசாரிக்கப்பட்டு விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மதிமுகவில் இருந்து நிரந்தர நீக்கம்
இந்நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், மல்லை சத்யாவின் கட்சி விரோத நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை குழு எழுப்பிய கேள்விகளுக்கு துரைவைகோ முறையாக பதில் அளிக்கவில்லை. அதே நேரத்தில் தன் மீதான குற்றச்சாட்டுகளையும் மல்லை சத்யா நிராகரிக்கவில்லை. இதனால் மல்லை சத்யா கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக வைகோ அறிவித்துள்ளார்.