தூங்கி 21 நாள் ஆச்சு.. துரோகிப்பட்டம் கட்டுறாங்க.. மல்லை சத்யா மனைவி பரபர பேச்சு
மதிமுகவில் வைகோ, துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மல்லை சத்யா மீது வைகோ குற்றச்சாட்டு வைத்ததால், அவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

வைகோ - மல்லை சத்யா மோதல்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மதிமுக கட்சியில் பெரும் பூசல் கிளம்பி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. பொதுச் செயலாளர் வைகோவும், துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவும், முதன்மைச் செயலாளர் துரை வைகோவும் இடையே சமீபத்தில் நடந்த சம்பவங்கள் கட்சிக்குள் கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா எனக்கு துரோகம் செய்ததாக வைகோ கூறியது, மல்லை சத்யாவை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றே கூறலாம்.
மதிமுக உட்கட்சி பிரச்சினை
தனது மகன் துரை வைகோவை முன்னிலைப்படுத்தவும், மல்லை சத்யாவை புறக்கணிக்கவும் வைகோ இப்படியொரு குற்றச்சாட்டை கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்குப் பதிலளிக்கவும், நீதி கேட்கவும் மல்லை சத்யா நேற்று மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பெரியார் சிலைக்கும் மரியாதை செலுத்திய பின், சிவனந்தா சாலையில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மல்லை சத்யா பேட்டி
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, “வைகோவிடம் பேச, துரை வைகோ சொன்னால்தான் பேச முடியும் என்ற நிலைமை வந்துவிட்டது. ஜனநாயகக் குரலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டத்தை நடத்துகிறேன்” என்று தெரிவித்தார். மேலும், தன்னை கட்சியில் இருந்து விலக்கவில்லை என்றும், தானும் விலகவில்லை என்றும் கூறினார். தந்தை வைகோ ஒரு காலத்தில் 28 ஆண்டுகள் ஜனநாயக வழியில் இருந்தவர் என்றாலும், துரை வைகோ அரசியலுக்கு வந்த பிறகு அது மாறிவிட்டது என அவர் குற்றம்சாட்டினார்.
துரை வைகோ
“வைகோவின் மனதை மதித்து அமைதியாக இருந்தேன். ஆனால் துரை வைகோ அநாகரிகமாக நடந்துகொள்கிறார். கைகளும் இணையவில்லை, இதயங்களும் இணையவில்லை” என்று வெளிப்படையாக பேசினார் மல்லை சத்யா. இந்த நிலையில் மல்லை சத்யாவின் மனைவி செய்தியாளர்களிடம் பேசியபோது, “24 மணி நேரமும் முழு நேர வேலையாக அரசியலில் இருக்கிறார்.
மல்லை சத்யா மனைவி
குடும்பம் என்பது அவருக்கு பகுதி நேர வேலை தான். 28 வருடத்தில் கட்சி ரீதியாக பயணம் அதிகம் மேற்கொண்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக புறக்கணிக்கப்பட்டு தற்காப்புக் கலை, கராத்தே, தமிழ்ச் சங்கம் போன்றவற்றில் ஈடுபட்டார். என்னை விட, குடும்பத்தை விட வைகோ மீது அதிக பாசம் உண்டு. ஆனால் துரோகி என்ற பட்டம் கொடுத்துளார்கள். கடந்த 21 நாட்களாக சரியாக தூக்கம் கூட வருவதில்லை. கட்சிக்காக முழு நேரம் உழைத்த அவரை பற்றி, வைகோ அவர்களுக்கு தெரியும்' என்று கூறினார்.