வைகோவுக்கும் மல்லை சத்யாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மல்லை சத்யா உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார், வைகோவின் ஜனநாயகப் போக்கு குறித்து விமர்சனங்களை முன்வைக்கிறார்.
MDMK dynastic politics : திமுகவில் வாரிசு அரசியல் இருப்பதாக கூறி புதிய கட்சியை தொடங்கிய வைகோ, தற்போது தனது மகனுக்கு மதிமுவில் தலைமை பொறுப்பு வழங்கியதற்கு உட்கட்சியில் மோதல் வலுத்துள்ளது. அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளராக உள்ள வைகோவிற்கும் அக்கட்சி துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மல்லை சத்யாவை துரோகி என வைகோ விமர்சித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மல்லை சத்யா ஆதரவாளர்கள், மதிமுகவில் இருந்து விலக தொடங்கினர். இந்த நிலையில் மதிமுகவில் உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க கோரி மல்லை சத்யா உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
வைகோவிற்கு எதிராக உண்ணாவிரதம்
அந்த வகையில் இன்று சென்னை தீவுத்திடல் அருகே சிவானந்தா சாலையில் மல்லை சத்யா தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மல்லை சத்யா, சத்யா எனக்கு துரோகம் செய்துவிட்டார் என்று வைகோ சொன்ன காரணத்தினால் மக்களிடம் நீதி கேட்டு இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளேன். மரண தண்டனை கைதிகளுக்கு கூட கடைசி ஆசை என்பது இருக்கிறது என கேட்பார்கள். ஆனால் குறைந்தபட்ச விளக்கம் கூட கேட்காமல் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை துரை வைகோ கட்சியில் இருந்உ நீக்குகிறார். எனவே தான் . உட்கட்சி ஜனநாயகத்தை பாதுகாக்க இந்த அறப்போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்
இன்றைக்கும் துணை பொதுச்செயலாளர் தான்
தனது மகன் வருகைக்கு முன்பாக 28 ஆண்டுகாலம் ஜனநாயகவாதியாக இருந்தார் வைகோ, மகன் வருகைக்குப் பின்னால் மறுமலர்ச்சி விலகி மகன் திமுகவாக மாறி மதிமுக என விமர்சித்தார். என் பெயரில் நான் மன்னிப்பு கேட்டதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. காலில் விழ கூடாது, கட் அவுட் அடிக்கக்கூடாது என துவங்கப்பட்ட இயக்கத்தில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக பேசிக் கொண்டிருக்கின்றனர். மதிமுகவில் நான் இன்றைக்கும் துணை பொதுச்செயலாளராக தான் நீடித்துக் கொண்டிருக்கின்றேன். அவரும் நீக்கவில்லை நானும் விலகவில்லை என்றார்
மதிமுக அலுவலகத்தில் வைகோ முன்னிலையில் நடந்த இணைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், துரை வைகோ கையை கொடுத்ததே ஒரு அநாகரிகமான முறையில் புறங்கையை தான் கொடுத்தார். அவர் கைகளும் இணையவில்லை, இதயங்களும் இணையவில்லை என்று தெரிவித்தார். வைகோவின் மனம் கலங்கக்கூடாது என்பதனால் ஒரு பண்பாடு இல்லாத ஒரு நபருடன் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருந்தது என்றும் மல்லை சத்யா தெரிவித்தார்
