- Home
- Tamil Nadu News
- கொஞ்ச அசந்தாலும் விஜய் தட்டி தூக்கிடுவாறு! தேர்தலுக்கு அதிமுக எதிர்கொள்ளப்போகும் சவால்கள் ? லிஸ்ட் போட்ட மாஜி நிர்வாகி!
கொஞ்ச அசந்தாலும் விஜய் தட்டி தூக்கிடுவாறு! தேர்தலுக்கு அதிமுக எதிர்கொள்ளப்போகும் சவால்கள் ? லிஸ்ட் போட்ட மாஜி நிர்வாகி!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு 8 மாதங்கள் உள்ள நிலையில், அதிமுக எதிர்கொள்ளும் சவால்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. பழனிசாமி விளக்கியுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் இன்றைய சூழலில் அதிமுக 2026 தேர்தலுக்கு எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பது குறித்து கே.சி.பழனிசாமி கூறியுள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்னும் தன்னுடைய தலைமையை தக்கவைக்க போராடிக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி, உட்கட்சிக்குள்ளயே அதுவும் அவரது அணிக்குள்ளயே போட்டியாளர்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், விலக்கப்பட்டவர்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களால் ஏற்படுகிற பாதிப்பு. அதேபோல எடப்பாடி பாஜகவுக்கு அதிகமாக வக்காலத்து வாங்கி பிரச்சாரம் செய்வது வரும் நாட்களில் பாஜகவின் 12 ஆண்டுகால ஆட்சி மீது உள்ள அதிருப்திகளுக்கும் சேர்த்து பதில் சொல்லும் நிலைக்கு ஆளாக்கப்படுவார்.
அண்ணாமலை போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் எடப்பாடிக்கு எதிராக இருக்கிறார்கள். மேடைகளில் எடப்பாடியை புகழ்ந்து அவரை ஏற்றுக்கொள்வதாக பேசினாலும், அண்ணாமலையை சார்ந்தவர்களின் வாக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறி தான். எடப்பாடி கட்சியை ஒருங்கிணைக்க தவறினால் விஜய் பலம்பெற வாய்ப்புண்டு, விஜய் அதிகமான வாக்குகளை பெற்றால் அது அதிமுகவின் வெற்றியை பாதிக்கும்.
பாமகவில் ஏற்பட்டிருக்கிற அப்பா, மகன் பிரச்சனையும் அதனால் பாமக வாக்குவங்கியில் ஏற்பட்டிருக்கிற சரிவும். தேமுதிக வெளிப்படுத்திய அதிருப்தியால், அவர்கள் அதிமுக கூட்டணியில் தொடர்வார்களா என்று தெரியவில்லை. சென்றமுறை NDAவில் தொடர்ந்தவர்களே இந்த முறை NDA வில் இருப்பார்களா என்று உறுதிப்படுத்தப்படவில்லை. எனவே இன்னும் எதிர்கட்சி தலைவர் பதவிக்காகவே போராடவேண்டிய சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி இருந்துகொண்டிருக்கிறார், சற்று கவனக்குறைவாக இருந்தாலும் அந்த எதிர்க்கட்சி தலைவர் இடத்தை பிடிக்க விஜய் போராடுகிறார்.
திமுக ஆட்சியின் மீது கடுமையான அதிருப்திகள் இருந்தாலும், கூட்டணி கட்சிகள் பலத்தோடு 45% வாக்கு வங்கி பெற்றிருப்பது போன்ற தோற்றம் கட்டமைக்கப்படுகிறது. அந்த திமுகவுக்கு எதிரான வாக்கு வங்கியை ஒருமுகப்படுத்தி கட்சியை ஒற்றுமைப்படுத்தி வென்று ஆட்சி அமைத்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையை எடப்பாடி பழனிசாமி ஏற்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கே போராட கூடாது என தெரிவித்துள்ளார்.