- Home
- Tamil Nadu News
- செப்டம்பர் 15-ம் தேதி வரை தான் டைம்! ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை போட்ட அதிரடி உத்தரவு!
செப்டம்பர் 15-ம் தேதி வரை தான் டைம்! ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை போட்ட அதிரடி உத்தரவு!
2025-26ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்பட உள்ளன. செப்டம்பர் 15-ம் தேதிக்குள் புதிய மையங்களுக்கான பள்ளிகளின் விவரங்களை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடக்கத்தில் மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் 2025-26ஆம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்: நடப்பு கல்வியாண்டில் (2025- 26) பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான புதிய மையங்கள் குறித்த கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி தேர்வு மையங்கள் அமைப்பதற்கான அவசியமுள்ள பள்ளிகளை நேரில் ஆய்வு செய்த பின்னர், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பரிந்துரை செய்ய வேண்டும்.
அவ்வாறு பரிந்துரை செய்யப்பட்ட புதிய மையங்கள் குறித்த தகவலை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இது தவிர அரசின் விதிகளின்படி இல்லாத பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கக் கோரினால் சார்ந்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 10 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்து தேர்வெழுத செல்லும் மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
அதேபோல், அரசின் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வு மையமாக செயல்பட அனுமதிப்படாது. இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி புதிய பொதுத்தேர்வு மையங்களுக்கான பரிந்துரை அறிக்கையை செப்டம்பர் 15-ம் தேதிக்குள் தேர்வுத் துறை அலுலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.