- Home
- Tamil Nadu News
- இந்த தேர்தல் வரைக்கும்தான் இபிஎஸ் பொதுச்செயலாளர்! அடுத்து இவர் தான்! முதல்வர் ஸ்டாலின் சொன்ன பகீர் தகவல்
இந்த தேர்தல் வரைக்கும்தான் இபிஎஸ் பொதுச்செயலாளர்! அடுத்து இவர் தான்! முதல்வர் ஸ்டாலின் சொன்ன பகீர் தகவல்
ஓபிஎஸ் ஸ்பெஷாலிட்டி என்ன என்று கேட்டால், எப்போதும் சிரித்த முகமாகத்தான் இருப்பார். இப்போதுகூட பாருங்கள் அதுதான் அவருடைய பண்பு. அவருடைய சிரிப்பே ஒருகாலத்தில் பிரச்சினை ஆகிவிட்டது.

கலைஞரால் பாராட்டப்பட்ட ஓபிஎஸ்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மாற்றுக் கட்சியினர் தாய்க் கழகம் திரும்பும் விழா திருமங்கலத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்: இந்த மேடை, மிக வித்தியாசமான மேடை சில காலத்திற்கு முன்பு வரை, நம்முடைய சகோதரர் ஓபிஎஸ் இந்த மேடையில் இருப்பார் என்று அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், லேட்டாக இருந்தாலும், மக்கள் திலகம் எம்ஜிஆர் இருந்த தாய்க்கழகமான திமுகவுக்கு திரும்பி இருக்கிறார்.
நம்முடைய அருமைச் சகோதரர் ஓபிஎஸ் இந்த மேடையில் பார்க்கும்போது, எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவிற்கு வருகிறது. 2008-இல், தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, நம்முடைய ஓபிஎஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்தார். அப்போது, நவம்பர் 11-ஆம் தேதி, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து, சட்டமன்றத்தில் நடந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், நம்முடைய ஓபிஎஸ் பேசினார். மறுநாள் காலையில், முரசொலியில் என்ன ஹெட்லைன்ஸ் போட்டார்கள் தெரியுமா? “பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம் என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்டார்கள். நம்முடைய ஓபிஎஸ்-உம் முரசொலி செய்தியைக் குறிப்பிட்டு, அவையில் பேசினார். உடனே தலைவர் கலைஞர் என்ன சொன்னார் என்றால், பச்சைத்தமிழர் பன்னீர்செல்வம் அதற்காகக் கவலைப்படக் கூடாது. பச்சைத்தமிழர் என்று தந்தை பெரியார் அவர்கள் காமராசருக்குப் பட்டமே கொடுத்திருக்கிறார். அதைத்தான் முரசொலி கொடுத்திருக்கிறது. அதுவும் முரசு அடித்துக் கொடுத்திருக்கிறது என்று தலைவர் கலைஞர் சொன்னார். இப்படி தலைவர் கலைஞரால் பாராட்டப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் திமுக இணைந்ததை நினைத்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
ஓபிஎஸ் சிரிப்பே ஒருகாலத்தில் பிரச்சினை ஆகிவிட்டது
நம்முடைய ஓபிஎஸ் ஸ்பெஷாலிட்டி என்ன என்று கேட்டால், எப்போதும் சிரித்த முகமாகத்தான் இருப்பார். இப்போதுகூட பாருங்கள்... அதுதான் அவருடைய பண்பு. பொதுவாக, ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டால்தான் பிரச்சினை ஆகும்; ஆனால், நம்முடைய ஓபிஎஸ் அவர்களுக்கு அவருடைய சிரிப்பே ஒருகாலத்தில் பிரச்சினை ஆகிவிட்டது. ஒருமுறை அவர் என்னைப் பார்த்து சட்டமன்றத்தில் சிரித்துவிட்டார். உடனே, ஸ்டாலினைப் பார்த்து ஓபிஎஸ் சிரித்துவிட்டார் என்று, ஏதோ, இரண்டு நாட்டுக்குள்ளே போர் வந்த மாதிரி பிரச்சினையாக ஆக்கிவிட்டார்கள். அரசியலில், ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம்; ஆனால், சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளும்போது, நலம் விசாரித்துக் கொள்வது அரசியல் மாண்பு; அதுதான் பண்பாடு. அப்படித்தான், அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் அவர்களைப் பார்த்து, மரியாதைக்காக வணக்கம் வைத்தேன். அவரும் சிரித்தார். உடனே இதைக் குற்றச்சாட்டாக ஆக்கிவிட்டார்கள். ஆனால், யார் என்ன சொன்னாலும், தன்னுடைய பண்பை மாற்றிக் கொள்ளாமல், அமைதியுடனும், அன்புடனும், அதே சிரித்த முகத்துடனும் இன்றைக்கும் இருக்கிறார் நம்முடைய ஓபிஎஸ் அவர்கள்.
ஓபிஎஸ்-ஐ புகழ்ந்த முதல்வர்
அமைதியும் - புன்னகையும் மட்டுமல்ல, ஓபிஎஸ் என்று சொன்னால், ஞாபகத்திற்கு வருகின்ற ஒரே சொல், “விசுவாசம்!” மறைந்த ஜெயலலிதா அவர்கள், தான் அமர்ந்த முதலமைச்சர் இருக்கையில், நம்முடைய ஓபிஎஸ் அவர்களை இரண்டு முறை அமர வைத்தார். தன்னிடம் ஒப்படைத்த அரசாட்சியை, எந்தத் துரோகமும் இல்லாமல், திருப்பி ஒப்படைத்த நேர்மைக்குச் சொந்தக்காரர்தான் ஓபிஎஸ். அதனால்தான், ஜெயலலிதா அவர்களே, சகோதரர் ஓபிஎஸ் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார். விசுவாசத்துக்கு ஒரு ஓபிஎஸ் என்றால், துரோகத்திற்கு அடையாளமாக இருப்பவர்தான் பழனிசாமி. கூவத்தூரில், அம்மையார் சசிகலா காலில் ஊர்ந்து, தவழ்ந்து சென்று முதலமைச்சராகிவிட்டு, அந்த அம்மையாரை நோக்கியே, “நீ எனக்குப் பதவி பெற்று தந்தாயா?” என்று ஒருமையில் கேட்டவர்தான் பழனிசாமி. அவர் இன்னும் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று நம்முடைய ஓபிஎஸ் அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
பாஜக யாருக்கும் நல்லது செய்யாது
பழனிசாமி அவர்களைப் பொறுத்தவரைக்கும், தன்னை காப்பாற்றிக் கொள்ள எது வேண்டுமானாலும் செய்வார். அவருடைய உச்சகட்ட துரோகம் என்ன தெரியுமா? தன்னைக் காப்பாற்றிக் கொள்ள எம்.ஜி.ஆர். உருவாக்கி, ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்தையே இன்றைக்கு அடமானம் வைத்திருக்கிறார் பழனிசாமி. பழனிசாமி என்ன நினைக்கிறார் என்றால், பாஜக தனக்கு நல்லது செய்யும் என்று நினைக்கிறார். உண்மையில், பாஜக யாருக்கும் நல்லது செய்யாது. இன்றைக்குக் கூட செய்திகளில் பார்த்திருப்பீர்கள்... நாளைக்கு மகளிர் தினத்தை அடிப்படையாக வைத்து, இன்றைக்கு சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தி, மகளிருக்குப் பரிசு கொடுத்திருக்கிறார்கள்.
பீகாரில் நடப்பதை பார்க்க வேண்டும்
மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களைத் தீட்டி, நன்மைகள் செய்து, மக்களுக்கு கொடுத்தால், அதுதான், திமுக! மக்களைப் பற்றிக் கவலப்படாமல், மக்களிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தால், அது பாஜக. இப்படி, யாருக்குமே நன்மை செய்யாத பாஜகவா, அதிமுகவுக்கு நன்மை செய்யப் போகிறது? அதிமுகவின் இரத்தத்தைத்தான் உறிஞ்சி எடுக்கும். அதுதான் நடக்கப் போகிறது. இதில், பழனிசாமிக்கு ஏதாவது ‘டவுட்’ இருந்தால், இதற்காகவாவது அவர் கொஞ்சம் தலையைத் தூக்கி, பீகாரில் நடப்பதைப் பார்க்க வேண்டும். பத்து முறை முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமாரையே பாஜக பந்தாடிவிட்டது.
பாஜக கண்ட்ரோலில் அதிமுக
இன்றைக்கு நிதிஷ்குமார் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கதிதான், நாளைக்குப் பழனிசாமி அவர்களுக்கும். அதற்கு அவர் முதலில் வெற்றி பெற வேண்டுமே என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது. எனக்குக் கிடைத்த தகவல்படி, அதிமுகவில் பழனிசாமி அவர்களுக்கு பதிலாக ஆல்-ரெடி வேறு ஒருவரைப் பொதுச்செயலாளராக பாஜக தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறது. பழனிசாமி அவர்களை இந்தத் தேர்தல் வரைக்கும்தான் பாஜக வைத்திருக்கும். பிறகு, அவரையே தூக்கிவிடுவார்கள். அதுதான் நடக்கப் போகிறது. ஒருவேளை, பாஜக கூட கூட்டணி வைக்க மறுத்திருந்தால், இப்போதே மாற்றி இருப்பார்கள். அந்தளவுக்கு, அதிமுக பாஜக-வின் கண்ட்ரோலுக்கு போய்விட்டது. அதிமுக தொண்டர்களின் வாக்குகளை வாங்கி, தன்னை வளர்த்துக் கொள்ள பாஜக போட்டிருக்கும் திட்டத்திற்கு, துணை போய்க் கொண்டிருக்கிறார் திருவாளர் பழனிசாமி என விமர்சித்துள்ளார்.

