- Home
- Tamil Nadu News
- TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
TN Politics: இந்தியா கூட்டணி கூட்டத்தை கைகழுவிய திமுக! அறிவாலயம் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம்? பரபரப்பு தகவல்!
TN Politics: காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது. திமுக முடிவுக்கு பின்னணியில் பாஜக உள்ளதா? என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் தலைகீழாக மாறிய அரசியல்
தவெக ஆட்சியை பிடித்தது முதல் தமிழகத்தில் அரசியல் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. திமுகவுடன் ஒரே குடும்பம் போல் இணைந்திருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக பக்கம் சென்று விட்டன. இதில் காங்கிரஸ் சொல்லாமல் கொள்ளாமல் தவெகவுக்கு தாவி முதல் ஆளாக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தது திமுகவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. தேர்தலுக்கு முன்பாக திமுக தயவால் மாநிலங்களவை எம்.பி.யை பெற்ற காங்கிரஸ், இப்போது தேர்தலுக்கு பின்னாக தவெக தயவில் ஒரு மாநிலங்களவை எம்.பி.யை உறுதி செய்து விட்டது.
சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிய காங்கிரஸ்
காங்கிரஸ் குறைந்தபட்சம் அரசியல் நாகரீகம் கூட இல்லாமல் நடந்து கொள்வதாக திமுக மட்டுமின்றி நடுநிலை வகிப்பவர்களே குற்றம்சாட்டுகின்றனர். மத்திய அளவில் பாஜகவுக்கு எதிரான இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகித்து வருகிறது. ஜூன் 8ம் தேதி இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிக்கும் திமுக
இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், 'டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு - ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட - ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது.
அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது.
காரணம் சொன்ன திமுக
"இந்தியா" கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் "இந்தியா" கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது. அதேநேரத்தில் -இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.
திமுக முடிவுக்கு பின்னால் பாஜக?
காங்கிரசை துரோகி என தெரிவித்துள்ள திமுக, இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளது. காங்கிரஸ் சொல்லாமல் கொள்ளாமல் தவெகவுக்கு ஓடியதால் தான் திமுக இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்பட்டாலும் அறிவாலயத்தின் முடிவுக்கு பின்னணியில் கமலாலயம் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். பாஜகவின் ஒரே நோக்கம். காங்கிரஸ் இல்லாத இந்தியா தான். இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதை விரும்பாத பாஜக, இப்போது இந்தியா கூட்டணி துண்டு துண்டாக சிதறி போவதை ரசித்து வருகிறது.
தேசிய அளவில் புதிய கூட்டணியா?
ஏற்கெனவே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால், திரிணாமுல் காங்கிரசின் மம்தா பானர்ஜி ஆகியோர் இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதை விரும்பாத நிலையில், இப்போது திமுகவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்தியா கூட்டணியில் இருந்து விலகி சமாஜ்வாடி, ஆம் ஆத்மி, திமுக ஆகிய கட்சிகள் சேர்ந்து தேசிய அளவில் புதிய கூட்டணி அமைக்க உள்ளதாகவும் இதற்கு மம்தா தலைமை வகிக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
திமுகவை வளைத்து போடும் முனைப்பில் பாஜக
மறுபக்கம் பாஜக, திமுகவை தூண்டி விட்டு காரியம் சாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது தொகுதி மறுவரையறை திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு திமுக எம்.பி.க்களின் ஆதரவை பாஜக கேட்க உள்ளதாகவும், இதற்கு பலனாக மத்திய அமைச்சரவையில் திமுகவுக்கு இடம் அளிப்பது தொடர்பாக பேசப்படுவதாகவும் ஒரு சில தகவல்கள் காட்டுத்தீ போல் பரவி வருகின்றன. இதில் திமுக பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் ஆதரவு அளிக்காமல் நடுநிலை வகிக்க உள்ளதாக ஒருசிலரும், காங்கிரஸின் துரோகத்துக்கு பழிவாங்க பாஜகவுடன் திமுக கைகோர்க்க உள்ளதாக மற்றொரு சிலரும் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
திமுக முடிவு என்ன?
ஏற்கெனவே அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திமுக திட்டம் போட்டது பூதாகரமாக வெடித்த நிலையில், தேர்தலுக்கு பிறகு நீட் தேர்வு மோசடி, பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட விவகாரங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் பாஜகவை முன்பு போல் கடுமையாக விமர்சிக்காதது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாப்ட் கார்னர் பாஜகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா? என ஒருசிலர் கேள்விகளை முன்வைக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இல்லாத நிலையில், திமுக முன்புபோல் பாஜகவை விமர்சித்து தனித்து நிற்குமா? இல்லை அவர்களுடன் கைகோர்க்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

